இவ்வாண்டு ஜூலை 14ஆம் தேதி சாங்கி விமான நிலையத்தை வந்தடைந்த நிரந்தரவாசி ஒருவர், வீட்டில் தங்கும் உத்தரவை ஹோட்டலில் கழிக்காமல் தமது வீட்டிலேயே கழிக்கும் நோக்கில் உறுதிமொழிப் படிவத்தில் பொய்யுரைத்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
லூ யி யின், 48, என்ற தைவானிய ஆடவர், தமது வீட்டில் தம்மைத் தவிர யாரும் இல்லை அல்லது தம்மைப் போலவே பயணம் மேற்கொண்ட குடும்ப உறுப்பினர்களுடன் வீட்டில் தங்கும் உத்தரவைக் கழிக்க முடியும் என்று குறிப்பிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, ஜூலை 14 முதல் 28 வரை அவர் வீட்டிலேயே தங்கியிருப்பதற்கான ஆணை வழங்கப்பட்டது.
மறுநாள் அமலாக்க அதிகாரிகள் அவரது வீட்டிற்குச் சென்று சோதனையிட்டபோது, அவரைப் போலவே பயணம் செய்திராத குடும்ப உறுப்பினர்கள் இருவர் அவ்வீட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, தொற்றுநோய்கள் சட்டத்தின்கீழ் இன்று வெள்ளிக்கிழமை லூமீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
சென்ற ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் நாளில் இருந்து, பிரத்தியேக இடங்களைத் தவிர்த்து வேறு இடங்களில் வீட்டில் தங்கும் உத்தரவை நிறைவேற்றுவோர், அந்த நாள்கள் முழுவதும் ஒரு மின்னணுக் கண்காணிப்புக் கருவியை அணிந்திருக்க வேண்டும்.
லூவிற்கான பிணைத்தொகை 5,000 வெள்ளியாக அறிவிக்கப்பட்டது. அவர்மீதான வழக்கு ஜனவரி 5ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தொற்றுநோய்கள் சட்டத்தின்கீழ் பொய்யுரைத்த குற்றத்திற்கு, முதல்முறை குற்றம் புரிவோர்க்கு ஆறு மாதம்வரை சிறையும் $10,000 வரை தண்டமும் விதிக்கப்படும்.
மீண்டும் அதே குற்றத்தைப் புரிந்தால் ஓராண்டுவரை சிறையும் $20,000 வரை தண்டமும் விதிக்கப்படும்.

