'சிவாஜி' திரைப்பட பாணியில் வெளிநாட்டு மாணவர் கும்பலின் மோசடி

1 mins read
12c022ff-7b80-470e-876a-aacf93e26b7d
போலிசாரின் அதிரடி சோதனையில் சொகுசு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. படம்: போலிஸ் -

கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக்குவதற்கு 'சிவாஜி' திரைப்படத்தில் காண்பிக்கப்பட்ட கதையைப்போல, ஆஸ்திரேலியாவில் பணமோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர் கும்பல் ஒன்றை ஆஸ்திரேலிய போலிசார் கைது செய்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் இடம்பெற்ற மிகப்பெரிய திருட்டுச் சம்பவமாகக் கருதப்படும் இந்த மோசடியை கடந்த ஓராண்டாக ரகசியமாக விசாரணை செய்து, தொடர்புடைய அனைவரையும் தாங்கள் கைது செய்துள்ளதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் மேற்கல்வி பயின்றுவிட்டு, சீனாவைச் சேர்ந்த ஏறக்குறைய 250 மாணவர்கள் நாடு திரும்பினர்.

காலாவதியான அவர்களது வங்கிக் கணக்குகளில் ஏடிஎம்வழி சட்டவிரோதமாக பணத்தை வைப்புச் செய்து, அதனை வெளிநாட்டிலிருந்து பெற்றுக்கொண்டு, ஆஸ்திரேலியா உட்பட உலகின் பல நாடுகளுக்குப் பரிவர்த்தனை செய்து, சட்ட ரீதியாக பணமாக மாற்றிக்கொள்ளும் மிக நுட்பமான மோசடி இது என்று போலிசார் விளக்கமளித்துள்ளனர்.

இந்த மோசடியில் குறைந்தது 62 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் புழங்கப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது. நேற்று வியாழக்கிழமை கைதாணையுடன் சென்று ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் ஆறு பேரை போலிசார் கைது செய்தனர்.

குறிப்புச் சொற்கள்