கந்தஹார்: ஆப்கானிஸ்தானின் கந்தஹார் நகரில் உள்ள ஷியா பள்ளிவாசலில் ஏற்பட்ட வெடிப்புகளில் குறைந்தது 33 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 72 பேர் காயமடைந்தனர் என்று அந்நகரத்தின் சுகாதாரத் துறை அதிகாரிகளை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியது.
இது கடந்த ஒரு வாரத்தில் ஆப்கானிஸ்தானில் ஷியா முஸ்லிம்களைக் குறிவைத்த இரண்டாவது தாக்குதல் ஆகும்.
வெடிப்பு நிகழ்ந்த பிபி பாத்திமா பள்ளிவாசல், கந்தஹாரில் ஷியா முஸ்லிம்கள் வழிபடும் ஆகப் பெரிய பள்ளிவாசலாகும்.
வெள்ளிக்கிழமைத் தொழுகையின்போது வெடிப்புகள் நிகழ்ந்ததாகக் கூறப்பட்டது.
மேலும் அது தற்கொலைத் தாக்குதல் என்று சம்பவத்தைப் பார்த்தவர்கள் கூறினர். தாக்குதலை மூன்று பேர் நடத்தினர் என்றும் ஒருவர் வாசலில் வெடிகுண்டை இயக்கினார் என்றும் மேலும் இரண்டு பேர் பள்ளிவாசல் கட்டடத்துக்குள் குண்டுகளை வெடிக்கச் செய்தனர் என்றும் கூறப்பட்டது.
சம்பவ இடத்தில் தலிபான் படைகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக தலிபான் ஆட்சியாளர்களின் பேச்சாளர் கூறினார்.

