கோலாலம்பூர்: மியன்மாரின் ராணு வத் தலைவர் அந்நாட்டில் அமைதித் திட்டத்தைச் செயல்படுத்தும் கடப்பாட்டை நிறைவேற்றவில்லை என்றால் அவர் விரைவில் நடத்தப்படவுள்ள ஆசியான் உச்ச நிலைக் கூட்டத்தில் கலந்துகொள்வதைத் தான் விரும்பவில்லை என்று மலேசியா கூறியுள்ளது.
மலேசிய வெளியுறவு அமைச்சர் செரி சாய்ஃபுதின் அப்துல்லா நேற்று இதைத் தெரிவித்தார்.
மியன்மாருக்கான ஆசியானின் சிறப்புத் தூதர் எரிவான் யூசூஃப் அடுத்த வாரம் அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொள்வார் என்றும் அவர் கூறினார்.
மியன்மார் ராணுவத் தலைவர் மின் ஆங் ஹிலாய்ங் ஆசியான் உச்சநிலைக் கூட்டத்தில் கலந்துகொள்வது குறித்து ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் நேற்று பேச்சு நடத்தினர்.
இவ்வேளையில் மியன்மார் ராணுவம் முன்வைத்த சண்டை நிறுத்த ஒப்பந்தத்தில் சேரும்படி மூத்த ராணுவத் தளபதி மின் ஆங் ஹிலாய்ங் நேற்று அங்குள்ள பல்வேறு குழுக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

