தென்கொரியா: அடுத்த வாரம் தளர்வு
சோல்: தென்கொரியா கொரோனா பரவலுக்கு எதிரான கடும் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, ஒன்றுகூடல்களை அனுமதிக்கும் என்று நேற்று தெரிவித்தது. கொவிட்-19 தொற்றுடன் வாழப் பழகிக் கொள்வதற்கான நீண்டகாலத் திட்டத்தைப் புதிய செயற்குழு வரைந்து வருகிறது. அதன் பகுதியாக வரும் திங்கள் முதல், உணவகங்கள், திரையரங்குகள் கூடுதல் நேரத்துக்குத் திறக்கப்படும்.
முடிவை மாற்றிய ஆஸ்திரேலிய பிரதமர்
கான்பரா: ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் சிஓபி26 பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதாக ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியுள்ளார்.
லண்டனில் அடுத்த மாதம் நடைபெறும் மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று அவர் கோடிகாட்டிய பின்னர் விமர்சனத்துக்கு ஆளானார். பெருமளவில் கரியையும் எரிவாயுவையும் உற்பத்தி செய்யும் ஆஸ்திரேலியா, தனது பருவநிலை மாற்றக் கொள்கைகளை மாற்றியமைக்க வேண்டும் என்று மற்ற உலக நாடுகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன.
மியன்மார்: கட்டடம் இடிந்து ஒருவர் பலி
யங்கூன்: ங்கூனின் கிழக்கு டாகோன் வட்டாரத்தில் கட்டப்பட்டு வந்த கட்டடம் ஒன்று நேற்று இடிந்து விழுந்தது. அதில் ஊழியர் ஒருவர் மாண்டுவிட்டார் என்றும் மூவர் காப்பாற்றப்பட்டனர். இடிபாடுகளில் சிக்கிய ஊழியர்களைத் தேடி வருவதாக அதிகாரிகள் கூறினர்.
எரிச்சல் அடைந்த பிரிட்டிஷ் அரசியார்
லண்டன்: பிரிட்டனின் எலிசபெத் அரசியார், பருவநிலை மாற்றத்தின் தொடர்பில் உலகநாடுகள் மந்தகதியில் செயல்படுவதால் எரிச்சல் அடைந்ததாகத் தெரிகிறது. நேற்றுமுன்தினம் வேல்ஸ் நாடாளுமன்றத்தைத் திறந்து வைத்தபோது தமது மருமகளான கமிலாவிடம் பேசினார். அப்போது சிஓபி மாநாடு பற்றி, "எல்லாம் பேசுகிறார்கள். ஆனால் செய்வதில்லை," என்று அவர் கூறியது பதிவானது.
தடுப்பூசி போட்டுக்கொள்ள பரிசுகள்
செபு: தடுப்பூசி போட்டுக்கொண்டால் வீடு, வாகனம், 100,000 பெசோவுக்கு (S2,660) கல்வி உபகாரச்சம்பளங்கள், மளிகைப் பொருட்கள் ஆகியவற்றைப் பரிசாக பிலிப்பீன்சின் செபு நகரவாசிகள் பெறலாம். செபு அதிகாரிகள் அதற்கான அதிர்ஷ்டக் குலுக்கலை அறிவித்துள்ளனர். செபுவின் 100,000 நகரவாசிகளில் 70% மக்களுக்குத் தடுப்பூசி போடும் இலக்கை எட்டவே அதிர்ஷ்டக் குலுக்கு அறிவிக்கப்பட்டது.
மருத்துவமனையில் பில் கிளிண்டன்
லாஸ் ஏஞ்சலிஸ்: அமெரிக்காவின் முன்னைய அதிபர் பில் கிளிண்டன், 75, கொரோனா அல்லாத தொற்று காரணமாக மூன்று நாட்களுக்கு முன்னர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் உடல்நிலை தேறி வருவதாக மருத்துவர்கள் கூறினர்.

