சிட்னி: பெருந்தொற்றுச் சூழலுக்குப் பின்னர் தற்போது மீண்டும் விமானங்களைச் செலுத்தத் தொடங்கியுள்ள விமானிகளால் விமானப் பயணங்களில் தவறுகள் ஏற்பட்டு வருகின்றன.
உதாரணத்துக்கு கிருமித்தொற்றிலிருந்து குணமடைய விடுப்பில் இருந்த விமானி ஒருவர், வேலைக்குத் திரும்பியதும் விமானத்தின் இரண்டாவது இயந்திரத்தை இயக்க மறந்துவிட்டார்.
நல்ல வேளையாக விமானம் வானில் பறப்பதற்கு முன்னரே அதை நிறுத்திவிட்டார். இல்லாவிட்டால் விபத்து நிகழ்ந்திருக்கும்.
பெருந்தொற்றுச் சூழலால் ஏழு மாதங்கள் தற்காலிகமாக வேலையிலிருந்து நிறுத்தப்பட்ட விமானி ஒருவர் விமானத்தை தரையிறக்க முயன்றார்.
ஆனால் அதற்கு முன்னேற்பாடாக சக்கரத்தை அவர் கீழிறக்கவில்லை என்று தெரிந்தவுடன், தரையிலிருந்து 240 மீட்டர் உயரத்தில் மீண்டும் விமானத்தை மேலே செலுத்தித் தப்பித்தார்.
இவை அமெரிக்காவில் நிகழ்ந்தவை. இதுபோல இன்னும் பல நடைபெற்று வருகின்றன.
பெருந்தொற்றின்போது உலகம் முழுவதும் உள்ள சுமார் 100,000 விமானிகளுக்கு நீண்ட விடுப்பு அளிக்கப்பட்டது அல்லது மிகக் குறைவான விமானப் பயணங்களை மேற்கொண்டனர்.
இதனால் விமானிகள் பலருக் கும் திறனும் தன்னம்பிக்கையும் குறைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஒரு விநாடி ஏற்படும் மறதியால் பேரிடர் ஏற்படலாம்.
சில விமான நிறுவனங்கள் தங்கள் விமானிகளுக்கு மறு பயிற்சி அளித்துள்ள வேளையில் வேறு சில நிறுவனங்கள் போதியநடவடிக்கை எடுக்கவில்லை என்று விமானிகள் சிலர் தெரிவித்தனர்.
எனினும் விமானத் துறைத் தரநிலைகளை நிர்ணயிக்கும் அனைத்துலக சிவில் விமானத் துறை அமைப்பும் அனைத்துலக விமானப் போக்குவரத்துச் சங்கமும் சேர்ந்து விமான நிறுவனங்களுக்கான நீண்ட வழிகாட்டிகளை வெளியிட்டுள்ளன.

