ஆஸ்திரேலியாவில் $140 மி. போதைமிகு அபின் பறிமுதல்
மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவில் முன் இல்லாத அளவுக்கு ஆகப் பெரிய அளவிலான போதைமிகு அபினை அந்நாட்டு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்டுள்ள போதைமிகு அபினின் மொத்த விலை $140 மில்லியன். போதைப்பொருளைக் கடத்தியதாக நம்பப்படும் மலேசியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பென்டோரா பேப்பர்ஸ்:
நடவடிக்கை எடுக்கும் மலேசியா
கோலாலம்பூர்: கணக்கில் காட்டப்படாத சொத்துகளை வைத்திருக்கும் சில அரசியல் தலைவர்களின் பெயர்கள் 'பென்டோரா பேப்பர்ஸ்' கசிவுகளில் வெளிவந்துள்ளன. ஆவணங்களில் இடம்பெறும் தலைவர்களுக்கு எதிராக மலேசிய அதிகாரிகள் தாராளமாக நடவடிக்கை எடுக்கலாம் என்று அந்நாட்டுப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்துள்ளார்.
இத்தாலிய ஊழியர்களுக்கு கடுமையான விதிமுறை
ரோம்: இத்தாலியர்கள் தங்கள் வேலையிடத்துக்குச் செல்ல வேண்டுமாயின் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும். அல்லது பரிசோதனையில் கிருமித்தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டிருக்கவேண்டும். கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டு அதிலிருந்து குணமடைந்தவர்களும் தங்கள் வேலையிடங்களுக்குச் செல்லலாம்.
அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டம் செய்த சமூக ஆர்வலர்களுக்குச் சிறை
ஹாங்காங்: அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய குற்றத்துக்காக ஹாங்காங்கைச் சேர்ந்த ஏழு சமூக ஆர்வலர்களுக்கு 12 மாதங்கள் வரை சிறைத் தண்டனை விதக்கப்பட்டது.
சீனா கொண்டு வந்த தேசிய பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஹாங்காங்கில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
'கிம் ஜோங் உன்னின்
அணுவாயுத மோகம் நீங்கவில்லை'
வாஷிங்டன்: வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னின் அணுவாயுத மோகம் இன்னும் நீங்கவில்லை என்று அமெரிக்க உளவுத் துறையினர் தெரிவித்துள்ளனர். வடகொரியாவில் உள்ள அணுவாயுதத் தளங்களைச் செயலிழக்கும் பணிகள் சீரான முறையில் நடைபெறவில்லை என்றும் அவ்விடங்களில் அணுவாயுத உற்பத்தி நடவடிக்கைகள் தொடர்வதாகவும் நிலைமையைக் கண்காணித்து வரும் அமெரிக்கா கூறுகிறது.

