நீண்டநாள் முடக்கநிலையில் இருந்து வெளிவரும் நகரம்

2 mins read
096930c4-38e2-4640-b40e-4c496995c335
உலகில் வேறெந்த நகரையும்விட மெல்பர்ன் நகரமே அதிக நாள்களாக முடக்கநிலையின்கீழ் இருந்து வருகிறது. படம்: இபிஏ -

மெல்பர்ன்: கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்வது கூடியிருப்பதை அடுத்து, ஆறாவது முறையாக அறிவிக்கப்பட்ட முடக்கநிலையில் இருந்து ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரம் இவ்வாரம் வெளிவர இருக்கிறது.

மெல்பர்னைத் தலைநகராகக் கொண்ட விக்டோரியா மாநிலத்தில் வரும் வியாழக்கிழமை இரவு 11.59 மணியில் இருந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளன.

"வீட்டைவிட்டு வெளியே செல்ல எந்தக் கட்டுப்பாடும் இராது," என்று விக்டோரியா முதல்வர் டேனியல் ஆண்ட்ரூஸ் கூறியுள்ளார்.

இல்லங்கள் ஒருநாளைக்கு அதிகபட்சம் பத்து விருந்தினர்களை வரவேற்கலாம். உணவகங்களும் காப்பிக்கடைகளும் சில கட்டுப்பாடுகளுடன் திறக்கப்படும்.

மாணவர்களும் இம்மாதம் 22ஆம் தேதி முதல் பள்ளிகளுக்குத் திரும்புவர்.

இப்போது அம்மாநில மக்கள்தொகையில் 70 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். அவ்விகிதம் 80 விழுக்காட்டை எட்டியதும் மேலும் பல சில்லறை விற்பனை நிலையங்களைத் திறக்க அனுதிக்கப்படும்.

உலகில் வேறெந்த நகரையும்விட மெல்பர்ன் நகரமே வெகுகாலமாக முடக்கநிலையின்கீழ் இருந்து வருகிறது. ஐந்து மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட அந்நகரம் ஆறு முடக்கநிலை அறிவிப்புகளால், மொத்தம் 262 நாள்களுக்கு முடக்கநிலையில் இருந்து வருகிறது.

இன்று ஞாயிற்றுக்கிழமை விக்டோரியாவில் புதிதாக 1,838 கொரோனா பாதிப்புகளும் ஏழு உயிரிழப்புகளும் பதிவாகின.

இதனிடையே, முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையின்றிப் பயணம் செய்ய ஏதுவாக சிங்கப்பூருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஆஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஆஸ்திரேலியாவில் மக்கள்நெருக்கம் மிகுந்த சிட்னி நகரிலும் மூன்று மாதங்களுக்குப் பிறகு இம்மாதம் 11ஆம் தேதி முடக்கநிலை அகற்றப்பட்டது.

குறிப்புச் சொற்கள்