அமெரிக்கா: ஓடும் ரயிலில் பெண் சீரழிப்பு

அமெரிக்கா: ஓடும் ரயிலில் பெண் சீரழிப்பு

2 mins read
ae93a990-2433-4a10-9ef4-8396a7bcc638
எட்டு நிமிடங்கள் நீடித்த கொடுமையைத் தடுக்காமல், கைபேசியில் படம்பிடித்தோர்மீது குற்றவியல் வழக்கு பதிவுசெய்யப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. படம்: நியூயார்க் டைம்ஸ் -

ஃபிலடெல்ஃபியா: அமெரிக்காவில் ஓடும் ரயிலில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டபோதும், சக பயணிகளில் ஒருவர்கூட அவருக்கு உதவ முன்வரவில்லை.

இச்சம்பவம் கடந்த புதன்கிழமை இரவு 10 மணியளவில், ஃபிலடெல்ஃபியா அருகே நிகழ்ந்தது.

ஃபிஸ்டன் எங்கோய், 35, என்ற ஆடவர், அப்பெண்ணின் அருகே அமர்ந்து பயணம் செய்தான். அவன் அப்பெண்ணைச் சிலமுறை தொட முயன்றான். அதனையடுத்து, அப்பெண் அவனது கையைத் தள்ளிவிட்டு, அவனது செய்கையைத் தடுக்க முயன்றதாகக் கூறப்பட்டது.

ஆனால், எதிர்பாராதவிதமாக அவன், அப்பெண்ணின் ஆடைகளைக் கிழித்து, தனது ஆசையைத் தீர்த்துக்கொண்டான். இந்தக் கொடூரம் எட்டு நிமிடங்கள் நீடித்தபோதும், அதைக் கண்ட சக பயணிகள் எவரும் அதைத் தடுத்து, அப்பெண்ணைக் காப்பாற்ற முன்வரவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.

"அப்பெண்ணுக்கு ஒருவரும் உதவாதது மனம் வருந்தச் செய்கிறது," என்றார் திமத்தி பெர்ன்ஹார்ட் என்ற காவல்துறை உயரதிகாரி.

அந்நேரத்தில் அந்த ரயில் பெட்டியில் இருந்தவர்கள், தங்களைத் தாங்களே கண்ணாடியில் பார்த்து, ஏன் அந்த மாபாதகனைத் தடுக்கவில்லை, அப்பெண்ணுக்கு உதவவில்லை என்று கேட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் ஆத்திரப்பட்டார்.

தற்செயலாக அந்த ரயில் பெட்டியில் நுழைந்த போக்குவரத்து ஆணைய அதிகாரி ஒருவர், அங்கு நிகழ்ந்த கொடுமையைக் கண்டார். உடனடியாக அப்பெட்டிக்கு விரைந்த காவல்துறை அதிகாரி ஒருவர், எங்கோயைக் கைதுசெய்தார்.

அவன்மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

பயணிகளில் சிலர் அக்கொடுமையைத் தங்களது கைபேசிகளில் படமெடுத்ததாகச் சொல்லப்படுகிறது.

உதவ முன்வராதபோதும் அக்கொடுமையை படமெடுத்தோர்மீது குற்றவியல் வழக்கு பதிவுசெய்யப்படும் என்று திரு பெர்ன்ஹார்ட் தெரிவித்துள்ளார்.