யங்கூன்: ஆசியான் கூட்டத்துக்கு அழைக்கப்படாததால் அதிர்ச்சியடைந்துள்ள மியன்மார் ராணுவம் 5,000க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை விடுவிக்க முன்வந்துள்ளது.
ஓய்வுபெற வேண்டிய ராணுவத் தலைவர் மின் அவுங் ஹிலைங், கடந்த பிப்ரவரி மாதம் ஜனநாயக ஆட்சியைக் கவிழ்த்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார்.
அப்போது முதல் நாட்டில் குழப்பம் நீடித்து வருகிறது.
ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானவர்களை ராணுவம் கொன்று குவித்துள்ளதாகவும் எட்டாயிரத்துக்கும் மேற்பட்டோைர சிறையில் அடைத்துள்ளதாகவும் உள்ளூர் கண்காணிப்பு அமைப்புகள் கூறுகின்றன.
இந்நிலையில் ஆசியான் தலைவர்களின் புறக்கணிப்பை சற்றும் எதிர்பாராத ராணுவத் தலைவர் மின், இம்மாத இறுதியில் 5,636 சிறைக் கைதிகள் விடுவிக்கப்படு வர் என்று அறிவித்துள்ளார். ஆசியான் கூட்டத்துக்கு மியன்மார் தலைவரை அழைக்க வேண்டாம் என்று அந்த அமைப்பு முடிவு செய்துள்ள நிலையில் திரு மின்னின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. யார் யார் விடுவிக்கப்படுவார்கள் என்ற விவரத்தை அவர் வெளியிடவில்லை.
கடந்த ஜூன் மாதம் ராணுவ அரசாங்கத்தை விமர்சித்த செய்தியாளர்கள் உட்பட 2,000 பேர் விடுவிக்கப்பட்டனர்.
ஆனால் கடந்த மே 24ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமெரிக்கச் செய்தியாளரான டேனி ஃபென்ஸ்டர் இன்னமும் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.
தொலைக்காட்சியில் உரையாற்றிய திரு மின், ராணுவ அரசாங்கத்தின் நடவடிக்கைகளை தற்காத்துப் பேசினார்.
நாட்டின் ஜனநாயகமும் அமைதியும் நிலைநாட்டப்படும் என்று அவர் உறுதி தெரிவித்தார். மியன்மாரில் அமைதியை ஏற்படுத்துவதற்காக ஆசியான் முன்வைத்த சில கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் அவர் சொன்னார்.

