சமய வன்முறை: பங்ளாதேஷில் 450 பேர் கைது

சமய வன்முறை: பங்ளாதேஷில் 450 பேர் கைது

1 mins read
eecdb43e-9a53-45af-aeaa-f016ae6e2051
சமயரீதியான தாக்குதல்களுக்கு எதிராக டாக்கா பல்கலைக்கழக ஆசிரியர்களும் மாணவர்களும் இந்து அமைப்புகளும் டாக்காவில் நேற்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம்: இபிஏ -

டாக்கா: முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பங்ளாதேஷ் நாட்டில் கடந்த சில நாள்களாக சிறுபான்மை இந்துக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் இதுவரை 450 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வன்முறைத் தாக்குதல்களில் குறைந்தது அறுவர் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் கூறின. இந்துக்களின் கோவில்கள் சேதப்படுத்தப்பட்டன; வீடுகள் சூறையாடப்பட்டன, தீக்கிரையாக்கப்பட்டன.

துர்க்கா பூசையின்போது இடம்பெற்ற இந்த வன்முறை நிகழ்வுகள் தொடர்பில் 71 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பங்ளாதேஷ் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பத்து விழுக்காட்டினர் இந்துக்கள்.

பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி 2009ல் ஆட்சியைப் பிடித்த பிறகு, அங்கு நிகழ்ந்த ஆகப் பெரிய சமய வன்முறை இது.

இந்நிலையில், "சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வெறுப்புணர்வால் பங்ளாதேஷ் இந்துக்கள்மீது தொடுக்கப்பட்ட அண்மைய தாக்குதல்கள், அரசியலமைப்பிற்கு எதிரானது. அது நிறுத்தப்பட வேண்டும்," என்று பங்ளாதேஷிற்கான ஐநா ஒருங்கிணைப்பாளர் மியா செப்போ வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, சமயத்தை முன்வைத்து வன்முறையைத் தூண்டிவிட்டோர்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி பிரதமர் ஷேக் ஹசினா, உள்துறை அமைச்சரிடம் அறிவுறுத்தியுள்ளார். அத்துடன், உண்மையை ஆராயாமல் சமூக ஊடகங்களில் வரும் எதனையும் நம்பிவிட வேண்டாம் என்று பொதுமக்களையும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.