செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
2a0855dd-e277-42b3-a9f3-baf85d6e2855
-
Google News Preferred Icon

ஜப்பான் நீரிணையில் சீனா,

ர‌ஷ்யப் போர்க்கப்பல்கள்

தோக்கியோ: சீனா, ரஷ்யாவின் 10 கடற்படைக் கப்பல்கள் ஒன்றாக திங்கட்கிழமையன்று ஜப்பான் நீரிணையைக் கடந்து சென்றதாக ஜப்பான் அரசாங்கம் கூறியது.

ஜப்பான் கடலையும் பசிஃபிக் பெருங்கடலையும் பிரிக்கும் சுகாரு நீரிணை வழியாக சீன, ரஷ்ய கடற்படை கப்பல்கள் ஒன்றாக செல்வதாக ஜப்பான் கூறுவது இதுவே முதல்முறை.

சுகாரு நீரிணை அனைத்துலக நீர்ப்பாதை என்றாலும், கிழக்கு சீனக் கடல் தீவுகள் தொடர்பில் சீனாவுடனும் எல்லை பிரச்சினை காரணமாக மாஸ்கோவுடனுமான ஜப்பானின் உறவு சமூகமாக இல்லை.

ஆனால் அக்கப்பல்கள், ஜப்பானிய கடற்பரப்பில் எல்லை மீறவில்லை என்றும், அனைத்துலக விதிமுறைகள் எதுவும் மீறப்படவில்லை என்றும் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

ஹாங்காங் தலைமை நிர்வாகிக்கு முழங்கையில் எலும்பு முறிவு

ஹாங்காங்: ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாம் கீழே விழுந்ததில் வலது முழங்கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து சிகிச்சை முடிந்து நேற்று அவர் வீடு திரும்பினார்.

குவீன் மேரி மருத்துவமனையிலிருந்து வெளியேறி காரில் அவர் ஏறுவதை ஊடகங்கள் படமெடுத்தனவே தவிர, செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் அவர் பதிலளிக்க வில்லை. "அவராகவே மருத்துவமனைக்குச் சென்றார். அவரது வலது முழங்கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது," என்று அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரியா ஏவுகணை சோதனை, தென்கொரியா தற்காப்பு கண்காட்சி

பியோங்யாங்: வடகொரியா மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை செலுத்தியதாக தென்கொரிய, ஜப்பான் ராணுவத்தினர் தெரிவித்தனர். வடகொரியாவின் சின்போ துறைமுகத்தில் இருந்து ஏவப்பட்ட அந்த ஏவுகணை ஜப்பான் கடலில் செலுத்தப்பட்டதாக தென்கொரியாவின் கூட்டுத் தலைமை அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த நடவடிக்கை மிகவும் வருந்தத்தக்கது என ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, தென்கொரியா நேற்று தற்காப்புத் துறை கண்காட்சியைத் தொடங்கியுள்ளது. போர்விமானம், ஆளில்லா விமானம், தொழில்நுட்பம் ஆகியவற்றைக் காட்டி ஏற்றுமதியை அதிகரிக்க முயல்கிறது தென்கொரியா.