அனைத்துலக பண நிதியத்தின் தலைமைப் பொருளியல் நிபுணர் கீதா கோபிநாத் தமது பணிக்காலத்தை முடித்துக் கொண்டு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் பொருளியல் பிரிவுக்கு அடுத்தாண்டு ஜனவரி மீண்டும் திரும்புவார் என நிதியம் செவ்வாய்க்கிழமையன்று அறிவித்தது.
நிதியத்தின் தலைமைப் பொருளியல் நிபுணரான முதல் பெண் எனும் பெருமைக்குரிய திருவாட்டி கீதா, அக்டோபர் 2018ல் இப்பதவியை ஏற்றார். கொவிட்-19 கிருமிப் பரவல், தடுப்பூசி இலக்கு ஆகியவை குறித்த அனைத்துலக பண நிதிய ஆய்வை வழிநடத்திய அவர், பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்கும் திட்டங்களிலும் ஈடுபட்டுள்ளார்.
அனைத்துலக பண நிதியத்தில் திருவாட்டி கீதாவின் பங்களிப்பு மகத்தானது என்று நிதியத்தின் தலைமை நிர்வாகி கிரிஸ்டலீனா தரிவித்தார். திருவாட்டி கீதாவின் கூரிய அறிவாற்றலாலும் அனைத்துலக பொருளியல் பற்றிய அவரது ஆழ்ந்த ஞானத்தாலும் நிதியம் மிகவும் பயனடைந்திருப்பதாக திருவாட்டி ஜோர்ஜீவா கூறினார்.
உலக நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி முன்னுரைப்புகளைத் தயாரிக்கும் உலகப் பொருளியல் கண்ணோட்ட அறிக்கையைத் தயாரிக்கும் ஆய்வுப் பிரிவை வழிநடத்திய திருவாட்டி கீதா, 2021ஆம் ஆண்டுக்குள் அனைத்து நாடுகளிலும் குறைந்தது 40 விழுக்காட்டினருக்குத் தடுப்பூசி போட்டு, கொவிட்-19 கிருமிப்பரவலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான 50 பில்லியன் டாலர் திட்டத்தைத் தயாரித்தற்குப் பாராட்டு பெற்றார்.

