தலிபானுடன் ரஷ்யா பேச்சுவார்த்தை
மாஸ்கோ: மத்திய ஆசியாவில் தனது செல்வாக்கை நிலைநாட்டும் வகையில், தலிபான் அமைப்புடன் மாஸ்கோவில் பேச்சுவார்த்தை நடத்துகிறது ரஷ்யா.
இந்தப் பேச்சுவார்த்தையில் இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 10 நாடுகள் கலந்துகொள்ளவுள்ளன.
ரஷ்யாவில் கருத்து வேறுபாடுகளைப் பரப்ப ஆப்கானிஸ்தானில் ஐஎஸ் போராளிகள் ஒன்றுகூடி திட்டமிடுவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் கடந்த வாரம் எச்சரித்ததைத் தொடர்ந்து, இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
மனிதாபிமான நெருக்கடியைத் தடுப்பதற்கான அனைத்துலக சமூகத்தின் முயற்சிகளை ஒருங்கிணைப்பதும் இந்தச் சந்திப்பின் நோக்கங்களில் ஒன்று என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சு கூறியது.
ஜப்பானில் அசோ எரிமலை வெடித்தது
தோக்கியோ: ஜப்பானின் க்யூஷு தீவில் அசோ எரிமலை நேற்று காலை முதல் வெடிக்கத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியைக் கரும்புகைகள் சூழ்ந்து வருகின்றன. எனவே, எரிமலையைச் சுற்றி 1 கிலோமீட்டர் தூரத்தில் வசிப்பவர்களுக்குச் சுவாசப் பிரச்சினைகள் ஏற்படக் கூடும் என்பதால் அங்குள்ளவர்கள் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அசோ எரிமலை இதற்கு முன்பு 2019ஆம் ஆண்டு வெடித்தது.
பெயர் மாற்றம் காணவுள்ளது ஃபேஸ்புக்
வாஷிங்டன்: ஃபேஸ்புக் பெயரை மாற்றுவதற்கு அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் ஸூக்கர்பெர்க் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனம் புதிய பெயரில் வர்த்தக மறுவடிவமைப்பு செய்யப்படும் எனவும், அதனுடைய ஒரேயொரு கைபேசி செயலியில் இன்ஸ்டகிராம், வாட்ஸ்அப், ஓகலஸ் உள்ளிட்டவையும் இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 'தி வெர்ஜ்' என்ற இதழில் வெளியாகியிருக்கும் தகவலின்படி, வரும் 28ஆம் தேதியன்று நடைபெறவிருக்கும் ஃபேஸ்புக்கின் ஆண்டு மாநாட்டில் இதுகுறித்து அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சீனாவில் 17 பேருக்குக் கிருமித்தொற்று
பெய்ஜிங்: சீனாவில் நேற்று 17 உள்ளூர் கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகின. நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 9ஆக இருந்தது. உள் மங்கோலியா, கன்சு, பெய்ஜிங், குய்ஸோ, யுனான், ஷான்ஸி, நிங்சியா ஆகிய இடங்களில் புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவானது.
ஷங்காயைச் சேர்ந்த மூத்தோர் சுற்றுலாக் குழுவினர் மூலம் கிருமித்தொற்று பரவியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஆனாலும் உள் மங்கோலியாவில் இருந்து கிருமிப் பரவல் தொடங்கியிருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

