'டெல்டா'வைவிட வேகமாகப் பரவும் கொவிட்-19 கிருமி கண்டுபிடிப்பு

'டெல்டா'வைவிட வேகமாகப் பரவும் கொவிட்-19 கிருமி கண்டுபிடிப்பு

1 mins read
9f054bc5-176b-49cd-8566-6611bcf2cd67
ரஷ்யாவில் புதிய உச்சமாக நேற்று புதன்கிழமை ஒரே நாளில் 1,028 பேர் கொரோனா தொற்றால் மாண்டுபோயினர். படம்: ஏஎஃப்பி -

மாஸ்கோ: கொவிட்-19 கிருமிகளில் 'டெல்டா'வைவிட வேகமாகப் பரவக்கூடிய புதிய வகை உருமாறிய கொரோனா கிருமியால் ரஷ்யாவில் சிலர் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக 'ஆர்ஐஏ' செய்தித் தகவல் கூறுகிறது.

'ஏஒய்.4.2' எனப் பெயரிடப்பட்டுள்ள அக்கிருமி அதிகமாகப் பரவும் சாத்தியமுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே ரஷ்யாவில் கிருமித்தொற்று புதிய உச்சத்தை எட்டிவரும் நிலையில், புதிய உருமாறிய கிருமியால் அது இன்னும் கூடலாம் என அஞ்சப்படுகிறது.

இந்தப் புதிய உருமாறிய கொரோனா கிருமி, 'டெல்டா'வின் இடத்தைப் பிடிக்கலாம் என்றும் ஆனாலும் அதற்குச் சிறிது காலம் ஆகலாம் என்றும் சொல்லப்படுகிறது.

ரஷ்யாவில் நேற்று புதன்கிழமை புதிய உச்சமாக 1,028 பேர் கொரோனா தொற்றால் மாண்டுவிட்டனர்; மேலும் 34,073 பேர்க்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து, அடுத்த மாதத் தொடக்கத்தில் ஒரு வார காலத்திற்குப் பணியிடங்களை மூட ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் ஒப்புதல் அளித்துள்ளார்.

'ஏஒய்.4.2' என்ற இந்தப் புதிய திரிபு, பிரிட்டனில் 'டெல்டா பிளஸ்' என அழைக்கப்படுகிறது. அந்நாட்டிலும் இப்புதிய வகை கொரோனா கிருமியால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.