'மனிதக் கழிவு' மழையால் தொப்பலான மனிதர்

'மனிதக் கழிவு' மழையால் தொப்பலான மனிதர்

1 mins read
f8cb399d-6b6d-4fbd-92a9-e18c3d7d71da
சம்பவத்திற்குப் பொறுப்பான விமான நிறுவனத்தின் பெயர் வெளியிடப்படவில்லை. படம்: இணையம் -

லண்டன்: மேலே பறந்த விமானத்தில் இருந்து விழுந்த மனிதக் கழிவுகள் ஆடவர் ஒருவரையும் அவரது தோட்டத்தையும் அலங்கோலமாக்கிய சம்பவம் இங்கிலாந்தில் நிகழ்ந்தது.

விண்ட்சர் நகரில் இவ்வாண்டு ஜூலையில் இச்சம்பவம் நிகழ்ந்தபோதும் கேரன் டேவிஸ் என்ற உள்ளூர் நகரமன்ற உறுப்பினர் ஒருவர்மூலம் இப்போதுதான் அது வெளியுலகிற்குத் தெரியவந்துள்ளது.

அந்த ஆடவரும் அவரது தோட்டமும் அங்கிருந்த குடைகளும் விமானத்திலிருந்து விழுந்த மனிதக் கழிவுகளால் முழுவதுமாக நனைந்துவிட்டதாக திருவாட்டி டேவிஸ் கூறினார்.

"விமானங்களில் இருந்து உறைந்த நிலையில் கழிவுகள் கீழே விழுந்தது குறித்து பலமுறை கேள்விப்பட்டுள்ளேன். ஆனால், இந்தச் சம்பவத்தில் ஒட்டுமொத்த தோட்டமுமே அலங்கோலமாகிப் போனது. இது மிக மிகக் கொடுமையான அனுபவம்," என்றார் திருவாட்டி கேரன்.

சம்பவத்திற்குப் பொறுப்பான விமான நிறுவனத்தின் பெயர் வெளியிடப்படவில்லை.

"பாதிக்கப்பட்ட ஆடவர், சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தைத் தொடர்புகொண்டபோது, தனது விமானம் எதுவும் அப்பகுதியில் பறக்கவில்லை என்று முதலில் அந்நிறுவனம் தெரிவித்தது. ஆனால், தடமறியும் செயலி ஒன்றின்மூலம் அவர் அடையாளம் கண்டு சொன்னதை அடுத்து, அந்நிறுவனம் ஒப்புக்கொண்டது," என்று திருவாட்டி கேரன் விவரித்தார்.

இருப்பினும், காப்புறுதி கேட்டு அவ்விமான நிறுவனத்தின்மீது அந்த ஆடவர் வழக்கு தொடுக்கவில்லை.

பொதுவாக, விமானங்களின் கழிப்பறைக் கழிவுகள் ஒரு பிரத்தியேகத் தொட்டியில் சேகரிக்கப்பட்டு, விமானம் தரையிறங்கியபின் அவை அகற்றப்படுவது வழக்கம்.