ஒரு வாரத்தில் 27,000 சுற்றுலாப் பயணிகள்; பயணத்துறைக்கு புத்துயிர் அளிக்க நடவடிக்கை
பினாங்கு: மலேசியாவில் உள்நாட்டுப் பயணங்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் கடந்த வாரம் அனுமதி அளித்தது. அதனையடுத்து பினாங்கு மாநிலத்தின் சுற்றுலாத் தலங்களைத் தேடி ஏராளமானோர் படையெடுக்கத் தொடங்கிவிட்டனர்.
பினாங்கில் உள்ள 14 சுற்றுலாத் தலங்களில் மட்டும் கடந்த வாரத்தில் 27,059 பேர் வருகை தந்துள்ளனர். அக்டோபர் 11 முதல் 19ஆம் தேதி வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளது.
இந்தக் காலகட்டத்தில் பினாங்கு மாநிலத்தில் உள்ள ஹோட்டல்களில் தங்குவோர் விகிதம் கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக கடற்கரைப் பகுதிகளில் உள்ள ஹோட்டல்களின் அறைகள் 75 விழுக்காடு பதிவுசெய்யப்பட்டிருந்தன என்று மலேசிய ஹோட்டல்கள் சங்கம் தெரிவித்தது.
பினாங்கில் உள்ள மற்ற சுற்றுலாத் தலங்களுக்கும் இந்தக் காலக்கட்டத்தில் மேற்கூறப்பட்ட எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமானோர் வருகை புரிந்திருக்கக்கூடும் என்று பினாங்கு சுற்றுலாத்துறை மற்றும் பொருளியல் புத்தாக்கக் குழுவின் தலைவர் இயோ சூன் ஹின் தெரிவித்தார்.
சுற்றுலாத்துறையை ஊக்குவித்து உள்நாட்டுப் பயணிகளை ஈர்க்கும் வகையில் பினாங்கு சுற்றுலாத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் நேற்று முன்தினம் 'பொறுப்புமிகு சுற்றுலாத்துறை' என்னும் இயக்கத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றும்போது திரு இயோ இவ்வாறு தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் சுற்றுலா ஏற்பாட்டாளர்களுக்கான பாதுகாப்பு விதிமுறைகள் அடங்கிய கையேடு ஒன்றையும் வெளியிட்டார்.
பினாங்குக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், இங்கு வருவதற்கு முன் ஏஆர்டி கருவிமூலம் கொவிட்-19 சோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் சுற்றுலாப் பயண ஏற்பாட்டாளர், பயணிகளின் கொவிட்-19 சான்றிதழைச் சரிபார்க்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

