செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
a7543bdf-72d5-408f-9b05-7c4833c3b095
-

'டெல்டா'வை விட வேகமாகப் பரவும் கொவிட்-19 கிருமி கண்டுபிடிப்பு

மாஸ்கோ: கொவிட்-19 கிருமிகளில் 'டெல்டா'வைவிட வேகமாகப் பரவக்கூடிய புதிய வகை உருமாறிய கொரோனா கிருமியால் ரஷ்யாவில் சிலர் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக 'ஆர்ஐஏ' செய்தித் தகவல் கூறுகிறது.

'ஏஒய்.4.2' எனப் பெயரிடப்பட்டுள்ள அக்கிருமி பரவலாகப் பரவும் சாத்தியமுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே ரஷ்யாவில் கிருமித்தொற்று புதிய உச்சத்தை எட்டிவரும் நிலையில், புதிய உருமாறிய கிருமியால் அது இன்னும் கூடலாம் என அஞ்சப்படுகிறது.

இந்தப் புதிய உருமாறிய கொரோனா கிருமி, 'டெல்டா'வின் இடத்தைப் பிடிக்கலாம் என்றும் ஆனாலும் அதற்குச் சிறிது காலம் ஆகலாம் என்றும் சொல்லப்படுகிறது.

ரஷ்யாவில் நேற்று புதன்கிழமை புதிய உச்சமாக 1,028 பேர் கொரோனா தொற்றால் மாண்டுவிட்டனர்; மேலும் 34,073 பேர்க்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து, அடுத்த மாதத் தொடக்கத்தில் ஒரு வார காலத்திற்குப் பணியிடங்களை மூட ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் ஒப்புதல் அளித்துள்ளார்.

'ஏஒய்.4.2' என்ற இந்தப் புதிய திரிபு, பிரிட்டனில் 'டெல்டா பிளஸ்' என அழைக்கப்படுகிறது. அந்நாட்டிலும் இப்புதிய வகை கொரோனா கிருமியால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

லண்டன்: விமானத்தில் இருந்து கொட்டிய கழிப்பறைக் கழிவுகள்

லண்டன்: மேலே பறந்த விமானத்தில் இருந்து விழுந்த கழிப்பறைக் கழிவுகள் ஆடவரையும் அவரது தோட்டத்தையும் அலங்கோலமாக்கிய சம்பவம் இங்கிலாந்தில் நிகழ்ந்தது. விண்ட்சர் நகரில் இவ்வாண்டு ஜூலையில் இச்சம்பவம் நிகழ்ந்தபோதும் கேரன் டேவிஸ் என்ற உள்ளூர் நகரமன்ற உறுப்பினர் ஒருவர் மூலம் இப்போதுதான் அது வெளியுலகிற்குத் தெரியவந்துள்ளது.

அந்த ஆடவரும் அவரது தோட்டமும் அங்கிருந்த குடைகளும் விமானத்திலிருந்து விழுந்த கழிவுகளால் முழுவதுமாக நனைந்துவிட்டதாக திருவாட்டி டேவிஸ் கூறினார். சம்பவத்திற்குப் பொறுப்பான விமான நிறுவனத்தின் பெயர் வெளியிடப்படவில்லை.

பொதுவாக, விமானங்களின் கழிப்பறைக் கழிவுகள் ஒரு பிரத்தியேகத் தொட்டியில் சேகரிக்கப்பட்டு, அவை தரையிறங்கியபின் அகற்றப்படுவது வழக்கம்.

சீனாவில் மீண்டும் கொரோனா

பெய்ஜிங்: சீனாவின் பல பகுதிகளில் கொரோனா தொற்று மீண்டும் தலையெடுத்துள்ளது. அதனையடுத்து அங்கு நூற்றுக்கணக்கான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. ஏராளமான கல்விக்கூடங்கள் மூடப்பட்டு பெரிய அளவிலான தொற்று சோதனை நேற்று தொடங்கப்பட்டது.

புதிதாக பரவி வரும் கொரோனா கிருமி, அங்கு வந்திறங்கிய சுற்றுப்பயணிகளுடன் தொடர்புடையது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

கொரோனாவால் முடங்கிக் கிடந்த உலக நாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக தொற்று கட்டுப்பாடுகளைத் தளர்த்தத் தொடங்கியுள்ளன. ஆனால், சீனா மட்டும் கொரோனாவை முற்றிலும் துடைத்தொழிக்க இலக்கு கொண்டுள்ளது. அதன் காரணமாக அது தனது எல்லைக் கட்டுப்பாட்டைத் தளர்த்தாமல் உள்ளது.