நடிகர் விவேக் மரணத்துக்கு தடுப்பூசி காரணமல்ல: தேசிய தடுப்பூசி ஆய்வுக்குழு

நடிகர் விவேக் மரணத்துக்கு தடுப்பூசி காரணமல்ல: தேசிய தடுப்பூசி ஆய்வுக்குழு

2 mins read
0a69ca5c-e1b3-421b-8401-83d314dd0c76
சென்னையில் நடிகர் விவேக் கோவேக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டபோது இப்படி கட்டைவிரலை உயர்த்தி, தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி மக்களுக்கு ஊக்கமூட்டினார். படம்: தமிழக ஊடகம் -

புதுடெல்லி: நகைச்சுவை நடிகர் விவேக்கின் மரணத்துக்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல என தேசிய தடுப்பூசி ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது.

உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே விவேக் உயிரிழந்ததாகவும் அக்குழு கூறியுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை யில், "நடிகர் விவேக் மரணத்துக்கு கொரோனா தடுப்பூசியான கோவேக்சின் காரணமல்ல.

"அவரது மரணம் இயற்கையாகவே நிகழ்ந்தது. மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாகவே அவர் உயிரிழந்தார். தடுப்பூசியால் அவருக்கு மரணம் ஏற்படவில்லை," என்று குறிப்பிட்டுள்ளது.

தமிழ்த் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் விவேக்.

கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி அவர் மரணமடைந்தார். அவரது திடீர் மரணம், திரையுலகினரை மட்டுமின்றி பொதுமக்களையும் அதிர்ச்சியடைய வைத்தது.

இறப்பதற்கு இரு நாள்களுக்கு முன்பு கொவிட்-19 தடுப்பூசியை விவேக் போட்டுக்கொண்டார்.

தடுப்பூசி போட்டுக்கொண்டதால்தான் அவர் உயிரிழந்தார் என மக்கள் மத்தியில் தகவல் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே, தடுப்பூசி போட்டுக்கொண்டதால் விவேக் மரணமடைந்ததாகக் கூறி, விழுப்புரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.

இந்த மனுவை ஏற்று ஆணையம் விசாரணை நடத்தி வந்தது.

விசாரணை முடிவில், விவேக் மரணத்திற்கும் கொரோனா தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை என தெரியவந்துள்ளது. உயர் ரத்த அழுத்தத்தால் மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்ததாக தடுப்பூசி ஆய்வுக்குழு விளக்கம் அளித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்