ஒட்டாவா: கனடா அதன் கொவிட்-19 கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வருகிறது.
அத்தியாவசியமற்ற வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்கும்படி அது வெளியிட்டிருந்த பயண ஆலோசனையை அது நேற்று முன்தினம் திரும்பப் பெற்றுக்கொண்டது.
நாட்டில் அதிகமானோருக்குத் தடுப்பூசி போட்டுவிட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கனடாவின் தலைமை மருத்துவ அதிகாரி திரேசா டேம் தெரிவித்துள்ளார்.
இம்மாதம் 8ஆம் தேதி நிலவரப்படி கனடாவில் ஏறத்தாழ 82 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாக அதிகாரபூர்வ தரவுகள் காட்டுகின்றன.
கூடிய விரைவில் மற்ற கட்டுப்பாடுகளும் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்
படுகிறது.
தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ்களைக் காட்டுவது, முகக்கவசம் அணிவது ஆகியவற்றையும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிவுக்குக் கொண்டுவர மக்கள்தொகை அதிகமுள்ள ஒன்டாரியோ மாநிலம் திட்டமிட்டுள்ளது.
அத்தியாவசியப் பயணங்களைத் தவிர்க்கும்படி கனடா மக்களிடம் கேட்டுக்கொள்ளும் வகையில் வெளியிடப்பட்ட அறிக்கையை ஒட்டாவா மாநிலம் மீட்டுக்கொண்டுள்ளபோதிலும் மற்ற நாடுகளுக்குச் சொகுசு கப்பல்கள் மூலம் செல்வதைத் தவிர்க்கும்படி அது கேட்டுக்கொண்டது.
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாக டாக்டர் டேம் கூறினார்.
மற்ற நாடுகளில் கிருமித்தொற்று பாதிப்பு மோசமாக இருப்பதை கனடா மக்களுக்கு அவர் நினைவூட்டினார்.
கட்டுப்பாடுகள் அனைத்தையும் ஒன்டாரியோ மாநிலம் அடுத்த ஆறு மாதங்களில் முடிவுக்குக் கொண்டு வரும் என்று கூறப்படுகிறது. அதற்கான திட்டத்தை அது வகுத்துள்ளது.
கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்படும் என்றும் கிருமிப் பரவலைத் தடுக்க இவ்வளவு காலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் விரயமாகாமல் இருப்பது உறுதி செய்யப்படும் என்றும் ஒன்டாரியோ மாநிலத்தின் முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்தார்.

