செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
720780fd-6675-434e-9bab-448a5f6a19af
-

சீனாவில் மேலும் 50 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று

பெய்ஜிங்: சீனாவில் நேற்று முன்தின நிலவரப்படி மேலும் 50 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. புதிதாகப் பாதிக்கப்பட்டோரில் 38 பேருக்குச் சமூக அளவில் பாதிப்பு ஏற்பட்டது. இவர்கள் கன்சு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

கிருமித்தொற்று ஏற்பட்டவர்களில் 17 பேருக்கு கொவிட்-19 அறிகுறிகள் இல்லை என்று சீனாவின் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர்.

நேற்று முன்தின நிலவரப்படி கிருமித்தொற்று காரணமாக சீனாவில் புதிதாக மரணங்கள் ஏற்படவில்லை. இதுவரை அந்நாட்டில் கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக 4,636 பேர் மாண்டுவிட்டனர். அத்துடன் அங்கு இதுவரை 96,715 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.

தென்கொரியா: 70% மக்களுக்கு தடுப்பூசி போட்டுவிட்டோம்

சோல்: மக்கள்தொகையில் 70 விழுக்காட்டுக்கும் அதிகமானோருக்கு கொவிட்-19 தடுப்பூசி போட கொண்டிருந்த இலக்கை அடைந்துவிட்டதாக தென்கொரியா அறிவித்துள்ளது.

தென்கொரியாவின் 51.3 மில்லியன் மக்கள்தொகையில் 35.9 மில்லியன் பேர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுவிட்டனர் என்று தென்கொரியாவின் நோய் கட்டுப்பாட்டு, தடுப்பு ஆணையம் தெரிவித்தது.

கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுக்க நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டுமாயின் மக்கள்தொகையில் குறைந்தது 70 விழுக்காட்டினருக்குத் தடுப்பூசி போட வேண்டும் என்று தென்கொரிய அரசாங்கம் நிபந்தனை விதித்திருந்தது.

இலக்கு எட்டப்பட்டுள்ளதால் உணவகங்கள், காப்பிக்கடைகள் ஆகியவற்றின் இயங்கும் நேரம் தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை அடுத்த மாதத் தொடக்கத்திலிருந்து தளர்த்துவது குறித்து தென்கொரிய அரசாங்கம் பரிசீலனை செய்து வருகிறது.

கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது தொடர்பான விரிவான தகவல்கள் இம்மாதம் 29ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபூ குவோக் தீவைத் திறந்துவிட வியட்னாம் திட்டம்

ஹனோய்: முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட சுற்றுப்பயணிகளுக்கு ஃபூ குவோக் தீவைத் திறந்துவிட வியட்னாம் திட்டமிட்டுள்ளது. சுற்றுப்பயணிகளிடையே பிரபலமான அந்த உல்லாசத் தீவு கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக மூடப்பட்டுள்ளது. அது மீண்டும் அடுத்த மாதம் திறந்துவிடப்படக்கூடும்.

2019ஆம் ஆண்டில் அத்தீவுக்கு 670,000க்கும் அதிகமானோர் சென்றனர். இதன்மூலம் வியட்னாமுக்கு $24 மில்லியனுக்கும் அதிகமான வருமானம் கிடைத்தது.

இந்நிலையில், வியட்னாமின் பொருளியலை மீண்டும் உயிர்ப்பிக்க தீவை மீண்டும் திறக்க வியட்னாமிய அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

ஜெர்மனியில் மோசமடைந்துள்ள கொவிட்-19 பாதிப்பு

பெர்லின்: ஜெர்மனியில் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த மே மாதத்தின் நடுப் பகுதிக்குப் பிறகு ஜெர்மனியில் நேற்று ஆக அதிகமானோருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.

கடந்த ஏழு நாட்களாக ஜெர்மனியில் உள்ள ஒவ்வொரு 100,000 பேரில் 100 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் கடுமையான கட்டுப்பாடுகள் மீண்டும் விதிக்கப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், இம்முறை பலர் தடுப்பூசி போட்டுக்கொண்டதால் நிலைமையைச் சமாளித்துவிடலாம் என்று ஜெர்மனியின் சுகாதார அமைச்சர் யென்ஸ் ஸ்பான் தெரிவித்தார்.

ஆனால் முகக்கவசம் அணிதல், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோருக்கு விதிக்கப்பட்ட உள்ளரங்கு நடவடிக்கை வரம்புகள் போன்ற கட்டுப்பாடுகள் அடுத்த வசந்தகாலம் வரை தொடரும் என்றார் அவர்.

ஜெர்மனியில் நேற்று புதிதாக 15,145 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டது. மேலும் 86 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. ஜெர்மனியில் இதுவரை 95,077 பேர் கிருமித்தொற்று காரணமாக மாண்டுவிட்டனர்.