டாக்கா: பங்ளாதேஷில் இந்து ஆலயங்கள், இந்து மக்களின் இல்லங்கள் ஆகியவற்றின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களைக் கண்டித்து அந்நாட்டின் சிறுபான்மை சமயங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். 60க்கும் அதிகமான இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
இந்துக்களுக்கு எதிராக சென்ற வாரம் நிகழ்ந்த கலவரங்களில் ஏழு பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. பங்ளாதேஷின் இரண்டாவது ஆகப் பெரிய நகரான சிட்டாகாங்கில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் குறைந்தது 15,000 பேர் கலந்துகொண்டனர். அந்நகரில்தான் பெரிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. தாக்குதல்களின் தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்போவதாக பங்ளாதேஷின் இந்து சமூகத் தலைவர்களிடம் அந்நாட்டுப் பிரதமர் ஷெய்க் ஹசீனா வாக்குறுதி அளித்தார்.

