பாலியல் இணையத்தளத்தில் கணக்கு; 'கல்லா' கட்டும் ஆசிரியர்

1 mins read
9e6c8293-13b2-4219-a677-c08a8d62f652
சாங்ஷு என்ற இந்த கணித ஆசிரியரின் காணொளிகளை இதுவரை 1.7 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். காணொளிப்படம் -

பாலியல் காணொளிகளைக் காட்டும் ஓர் இணையத் தளத்தில் கணக்குப் பாடம் நடத்தி கல்லா கட்டி வருகிறார் தைவானைச் சேர்ந்த 34 வயது ஆசிரியர் ஒருவர்.

"பாலியல் காணொளித் தளங்களை ஏராளமானோர் பார்க்கின்றனர். ஆனால், அதில் கணக்குப் பாடம் எடுப்பவர்கள் ஒருசிலரே. அதனால், எனது காணொளிகளை அதில் பதிவேற்றம் செய்தால் பலரும் பார்ப்பர் என்று நினைத்தேன்," என்று சாங்ஷு என்ற இந்த ஆசிரியர் சொன்னதாக 'மெல்' சஞ்சிகை தெரிவிக்கிறது.

'சாங்ஷுமேத்666' என்ற பெயரில் இவரது காணொளிகள் அந்தப் பாலியல் தளத்தில் இடம்பெற்றுள்ளன. இவரது காணொளிகளை இதுவரை 1.7 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.

"எனது காணொளிகளைப் பார்க்க பலருக்கும் ஆர்வமில்லாமல் இருக்கலாம். ஆனால், பாலியல் காணொளித் தளத்தில் நுண்கணிதப் பாடம் (Calculus) எடுக்கும் ஆசிரியர் ஒருவர் இருக்கிறார் என்பது அவர்கள் அனைவர்க்கும் தெரியும்," என்றார் திரு சாங்ஷு.

இதன்மூலம் இவர் ஆண்டிற்கு 250,000 அமெரிக்க டாலர் வருமானம் ஈட்டுகிறார்.

"பாலியல் இணையத்தளத்தில் கணிதப் பாடம் நடத்த நான் விரும்பவில்லை. ஆனால், நுண்கணிதப் பாடத்தை அருமையாக நடத்தும் ஆசிரியர் ஒருவர் தைவானில் இருக்கிறார் என்று உலகிற்குக் காட்டவே இதைச் செய்கிறேன்," என்றார் திரு சாங்ஷு.

இவரது கணிதப் பாடங்களைக் காண அந்தக் குறிப்பிட்ட பாலியல் இணையத்தளத்திற்குச் செல்ல வேண்டும் என்பதில்லை. இன்ஸ்டகிராமிலும் யூடியூபிலும் அவற்றைக் காணலாம்.