தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

6,000 பேரை வேலைக்கு எடுக்கும் முன்னணி நிறுவனம்

1 mins read
cf8df8f0-1c3d-46a6-8c69-020bc2883d1b
எமிரேட்ஸ் விமானப் போக்குவரத்து நிறுவனம் கடந்த மாதமே உலகம் முழுவதுமிருந்தும் ஆட்சேர்ப்பு நடவடிக்கையைத் தொடங்கிவிட்டது. படம்: ராய்ட்டர்ஸ் -

துபாயைத் தளமாகக் கொண்ட எமிரேட்ஸ் விமானப் போக்குவரத்து நிறுவனம், அடுத்த ஆறு மாதங்களில் 6,000 பேர்க்குமேல் வேலைக்கு எடுக்கவிருக்கிறது.

உலக நாடுகள் கொவிட்-19 கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வரும் நிலையில், கூடுதல் விமானிகள், விமானச் சிப்பந்திகள், பொறியியல் வல்லுநர்கள், விமான நிலையப் பணியாளர்களை வேலையில் சேர்க்க எமிரேட்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

உலகம் முழுவதுமிருந்தும் 3,000 விமானச் சிப்பந்திகளையும் 500 விமான நிலையச் சேவைப் பணியாளர்களையும் வேலைக்கு எடுக்கும் நடவடிக்கையை கடந்த மாதமே அந்நிறுவனம் தொடங்கிவிட்டது.

கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதை அடுத்து பலரும் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருவதால், எமிரேட்ஸ் நிறுவனமும் தனது சேவைகளை அதிகரித்து வருகிறது. இவ்வாண்டு இறுதிக்குள், கிருமித்தொற்றுக்கு முன்பிருந்த தனது சேவை அளவில் 70 விழுக்காட்டை அது எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து, மேலும் 700 விமான நிலையப் பணியாளர்களை வேலையில் சேர்க்க எமிரேட்ஸ் முடிவுசெய்துள்ளது. அத்துடன், தகுதியுள்ள 600 விமானிகளுக்கும் அந்நிறுவனத்தில் வேலைவாய்ப்பு காத்திருக்கிறது.

கூடுதல் விவரங்களுக்கு https://www.emiratesgroupcareers.com/ என்ற இணையத்தளத்தை நாடலாம்.

முன்னதாக, ஐக்கிய அரபுச் சிற்றரசுகளையும் மத்திய கிழக்கு நாடுகளையும் சேர்ந்த விமானப் போக்குவரத்து நிறுவனங்கள், அடுத்த 20 ஆண்டுகளில் 54,000 விமானிகள், 51,000 பணியாளர்கள், 91,000 விமானச் சிப்பந்திகள் உட்பட 196,000 பேரை வேலைக்கு எடுக்கும் என்று அமெரிக்க விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங் கடந்த வாரம் முன்னரைத்து இருந்தது.

குறிப்புச் சொற்கள்