புதுடெல்லி: இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கொவேக்சின் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர்கள், உலக சுகாதார நிறுவனம் இன்னும் அத்தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்காததால் வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
கொவேக்சின் தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட கேரளாவைச் சேர்ந்த பி.ஆர்.சுகதன், 57, சவூதி அரேபியா திரும்பி தமது வேலையில் சேர முடியாமல் ஒன்பது மாதங்களாகத் தவித்து வருகிறார்.
கடந்த ஆண்டு அவரின் தந்தை இறந்துவிட்டார். ஆனால், கொவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக அப்போது அவரால் இந்தியா திரும்ப முடியவில்லை. இவ்வாண்டு ஜனவரியில் சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தார்.
"இனியும் என்னால் சும்மா இருக்க முடியாது. சவூதி திரும்பி, நான்கு நாள்கள் தனிமைப்படுத்திக்கொண்ட பின்னர் கொவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டது. முன்னர் கொவேக்சின் போட்டுக்கொண்ட நிலையில், அடுத்து கொவிஷீல்டு போட்டுக்கொள்வது எனது உடல்நிலையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உறுதியாகத் தெரியவில்லை," என்றார்.
இருந்தாலும், கொவேக்சினுக்கு அங்கீகாரம் அளிக்கப்படாவிடில், சவூதி சென்று கொவிஷீல்டு போட்டுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர் சொன்னார்.
இதனிடையே, கொவேக்சின் தடுப்பூசியை அவசரகாலப் பயன்பாட்டிற்கு அனுமதிப்பது தொடர்பில் உலக சுகாதார நிறுவனம் இன்று 26ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இறுதி முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொவேக்சின் தடுப்பூசியைத் தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனம் அளித்த தரவுகளைக் கடந்த ஜூலை முதலே உலக சுகாதார நிறுவனம் ஆராய்ந்து வருகிறது.
அதன் அங்கீகாரமின்றி, இருமுறை போட்டுக்கொள்ளக்கூடிய கொவேக்சின் தடுப்பூசி, அனைத்துலக அளவில் செல்லத்தக்க தடுப்பூசியாக ஏற்றுக்கொள்ளப்படாமல் போகலாம். அத்தகைய சூழலில், அதைப் போட்டுக்கொண்ட மில்லியன்கணக்கான இந்தியர்கள் வெளிநாடு செல்வதில் சிரமம் ஏற்படலாம் எனச் சொல்லப்படுகிறது.


