சிங்கப்பூர் வந்த 5,134 பயணிகளில் வெறும் ஐவருக்கு கொவிட்-19 தொற்று

சிங்கப்பூர் வந்த 5,134 பயணிகளில் வெறும் ஐவருக்கு கொவிட்-19 தொற்று

1 mins read
4842c47e-17d9-4ca2-9c3d-bb7c810671c9
தடுப்பூசிப் பயணத்தடத் திட்டத்தின்கீழ், சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகள் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணத்தட (Vaccinated Travel Lane) திட்டத்தின்கீழ் சிங்கப்பூருக்கு இதுவரை வந்துள்ள 5,134 பயணிகளில் ஐந்து பேர் மட்டுமே கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் புள்ளிவிவரங்களைப் போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் இன்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 26) தெரிவித்தார்.

தடுப்பூசிப் பயணத்தடத் திட்டத்தின்கீழ், சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகள் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை.

மாறாக, அவர்கள் சிங்கப்பூருக்கு வருவதற்கு முன்பும் சிங்கப்பூர் வந்திறங்கிய பிறகும் கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

கடந்த மாதம் 8ஆம் தேதி ஜெர்மனி, புருணை ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு இந்தத் திட்டத்தை சிங்கப்பூர் தொடங்கியது.

இம்மாதம் 19ஆம் தேதி கனடா, டென்மார்க், பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

அடுத்த மாதம் 15ஆம் தேதி தென்கொரியப் பயணிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.

நேற்று திங்கட்கிழமை நிலவரப்படி, கடந்த மாதம் 8ஆம் தேதியிலிருந்து அடுத்த மாதம் 30ஆம் தேதி வரை சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்ள, புருணையைச் சேர்ந்த 290 பயணிகளுக்கும் ஜெர்மனியைச் சேர்ந்த 6,226 பயணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை புருணையிலிருந்து 152 பயணிகளும் ஜெர்மனியிலிருந்து 3,610 பயணிகளும் சிங்கப்பூருக்கு வந்துள்ளனர்.

இதற்கிடையே, இம்மாதம் 19ஆம் தேதியிலிருந்து அடுத்த மாதம் 30ஆம் தேதி வரை ஏனைய நாடுகளிலிருந்து 8,583 பயணிகள் சிங்கப்பூருக்கு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அவர்களில் 1,372 பயணிகள் சிங்கப்பூருக்கு வந்துவிட்டனர்.