வாஷிங்டன்: அமெரிக்கா பெரும்பாலான வெளிநாட்டுப் பயணிகளுக்கான கொவிட்-19 தடுப்பூசித் தகுதி குறித்து நேற்று புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. அந்தப் புதிய விதிமுறையின்படி, கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளது.
அனைத்துலகத் தடுப்பூசிக் கொள்கையை அமெரிக்கா பின்பற்ற இணங்கியுள்ளது. இது வரும் நவம்பர் 8ஆம் தேதியிலிருந்து நடப்புக்கு வருகிறது. 2020ஆண்டு முற்பாதியில் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக பிரிட்டன், அயர்லாந்து, சீனா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஈரான் மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளிலிருந்து வருகை தருவோருக்குக் கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதித்திருந்தது.
பின்னர், அந்தத் தடைகளைப் படிப்படியாக நீக்கி, தடுப்பூசியை அடிப்படையாகக் கொண்ட அனைத்துலக விமானக் கொள்கையை ஏற்றுக்கொண்டு மீண்டும் பயணத்தைத் தொடங்குவதே சிறந்த வழி என்று அமெரிக்க அதிபர் பைடன் கூறியுள்ளார். புதிய தடுப்பூசி விதிமுறைகளின்படி 18 வயதுக்குக் கீழுள்ள குழந்தை மற்றும் சிறார்கள், நோய்வாய்ப்பட்டவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.
அதேபோல் பத்து விழுக்காட்டுக்கும் குறைந்த அளவு தடுப்பூசி போடப்பட்டுள்ள 50 நாடுகளில் இருந்து வரும் சுற்றுப்பயணிகள் அல்லாதோரான, உற்றார், உறவினர்களைக் காண வருவோருக்கு தடுப்பூசிக் கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. ஆனால், அவர்கள் அமெரிக்காவுக்கு வந்து இறங்கிய 60 நாள்களுக்குள் தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும்.
நைஜீரியா, எகிப்து, அல்ஜீரியா, ஆர்மேனியா, மியன்மார், ஈராக், செனெகல், உகாண்டா, லிபியா, எத்தியோப்பியா, ஸாம்பியா, காங்கோ, கென்யா போன்ற நாடுகளுக்கும் இது பொருந்தும்.
விமான நிறுவனங்களும் பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கு முன்னர் அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டதை உறுதிசெய்யவேண்டும் என்று அதிபர் பைடனின் நிர்வாகம் தெரிவித்தது.

