செய்திக்கொத்து

2 mins read
fa2c9847-912a-49d1-a079-f3c7d53d5c73
-

தாய்லாந்தில் கண்டறியப்பட்ட முதல் உள்ளூர் 'டெல்டா பிளஸ்' சம்பவம்

பேங்காக்: 'டெல்டா பிளஸ்' உருமாறிய கொவிட்-19 கிருமி தொடர்பான முதல் சம்பவம், தாய்லாந்தில் பதிவாகியுள்ளது என்று அந்நாட்டின் பொதுச் சுகாதார அமைச்சு தெரிவித்து உள்ளது. 'ஏஒய்.4.2' என்றும் அடையாளப் படுத்தப்படும் அந்தப் புதுவகை கிருமி, ஆயுத்தியாவின் பேங் சாய் பகுதியைச் சேர்ந்த 49 வயது ஆடவர் ஒருவரைக் கடந்த மாதம் தொற்றிவிட்டது. அந்த ஆடவர் கிருமித்தொற்று அபாயமுள்ள பகுதிகளுக்கோ வெளிநாட்டிற்கோ பயணம் செய்யவில்லை. ஆயினும், அவர் முழுமையாகக் குணமடைந்துவிட்டார் என்றும் 'டெல்டா பிளஸ்' கிருமியால் வேறு எவரும் பாதிக்கப்பட்டதாகக் கண்டறியப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இப்போதைய பாதிப்புகளுக்குப் பெரும்பாலும் காரணமாக விளங்கும் 'டெல்டா' கிருமியை காட்டிலும், 'டெல்டா பிளஸ்' கிருமி வீரியமிக்கது, அதிகம் பரவக்கூடியது என்று சொல்லப்படுகிறது.

மலேசியாவில் 94.7% முழுமையாக தடுப்பூசி போட்டவர்கள்

கோலாலம்பூர்: மலேசியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோரில் 94.7 விழுக்காட்டினருக்கு முழுமையாகத் தடுப்பூசிப் போடப்பட்டுள்ளது. 97.5 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் ஒருமுறை தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இது அந்நாட்டின் சுகாதார அமைச்சின் தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது. அங்கு இதுவரை 49,253,453 முறை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 12 வயது முதல் 17 வயது உடையோருக்கு இதுவரை 55.3 விழுக்காடு முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த வயதுடையோரில் 81.6 விழுக்காட்டினர் ஒரு முறை தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர் என்று பெர்னாமா செய்தி தெரிவித்தது.

'உலகநாடுகளுக்கான எண்ணெய்

இருப்பு வேகமாக குறைந்துவருகிறது'

ரியாத்: அனைத்துலக அளவில் எண்ணெய் உற்பத்தி ஆற்றல் வெகு விரைவாகக் குறைந்துவருவதாகவும் உற்பத்திக்காக நிறுவனங்கள் கூடுதல் முதலீடு செய்ய வேண்டிய நிலை வந்துள்ளதாகவும் சவுதி அராம்கோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அமின் நாசிர் கூறியுள்ளார். இருப்பில் உள்ளது மிக வேகமாகக் குறைவதைப் பற்றி ஒரு பேட்டியின்போது குறிப்பிட்ட அவர், இது பெரும் அக்கறைக்குரியது என்றும் எச்சரித்தார். கொவிட்-19 கொள்ளைநோய் தணிந்து அதிகமானோர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டால், எண்ணெய்ச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள விநியோகத் தட்டுப்பாடு 2022ல் மேலும் மோசமாகலாம் என்று கூறினார் அவர்.

மலேசியா: வெள்ளம் வடிந்தும் பலர்

துயர்துடைப்பு நிலையங்களில் தஞ்சம்

கோலாலம்பூர்: மலேசியாவின் மலாக்கா, சிலாங்கூர், கெடா ஆகிய மாநிலங்களில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஏராளமானோர், துயர்துடைப்பு நிலையத்தின் முகாம்களில் அடைக்கலமாயினர். பின்னர் வெள்ளம் வடிந்த பின்னர் பலர் தங்கள் வீடுகளுக்குத் திரும்பினர். இருப்பினும் சில பகுதிகளில் மின்சார விநியோகத் தடையால் பலர் முகாம்களில் தங்கியிருப்பதாக மலேசிய குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.