தம் இரு மகள்களையும் கொன்றுவிட்டு தலைமறைவான இலங்கை பெண்ணை இத்தாலிய போலிஸ் தேடி வருகிறது.
இத்தாலியின் வெறோனா பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. கொலையுடன் சம்பந்தப்பட்டவர் என்று சந்தேகிக்கப்படும் சசித்ரா நிசன்சல பெர்னாண்டோ தேவதர மஹாவதுக்கே என்ற 33 வயது பெண் தேடப்பட்டு வருகிறார் என்று போலிசார் தெரிவித்துள்ளனர்.
படுகொலை செய்யப்பட்டுள்ள மூன்று வயது மற்றும் 11 வயதுடைய இரு சிறுமிகளும் இத்தாலியில் பிறந்தவர்கள். தாயுடன் வசித்து வந்தவர்கள் வீட்டைவிட்டு வெளியேறாததால், அண்டைவீட்டார் போலிசாருக்குத் தகவல் அளித்தனர். அங்கு சென்ற அதிகாரிகள், இரு சிறுமிகளையும் சடலங்களாகக் கண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
திருமணம் செய்துகொண்டு ஏறக்குறைய 20 ஆண்டுகளாக இத்தாலியில் வசிந்து வந்த சசித்ராவுக்கு அருகில் உறவினர்கள் யாரும் வசிக்கவில்லை. இத்தாலியில் தொலைதூரத்தில் உறவினர் ஒருவர் உள்ளார் என்று கூறப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்னர், சசித்ராவுக்கும் கணவருக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டு, அது மோசமான நிலையை எட்டியது. அவரது கணவரின் உறவினர் பலர் இத்தாலியில் வசிக்கிறார்கள். இது, சசித்ராவுக்கு தொடர்ச்சியாக அச்சத்தை ஏற்படுத்தியதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறினர்.
"பிள்ளைகளைக் கொன்றுவிட்டு, நானும் இறப்பனே தவிர, என்னுடைய குழந்தைகளை ஒருபோதும் கணவரிடம் ஒப்படைத்துவிடமாட்டேன்," என்று தமக்கு தெரிந்தவர்களிடம் அண்மைக்காலமாக கூறி வந்தார் சசித்ரா.
சில மாதங்களாகவே, தம் கணவருடன் மகள்கள் நெருக்கமானதைக் கண்டு சசித்ரா அச்சமடைந்தார் என்று கூறப்படுகிறது.
முன்னாள் முதலாளி ஒருவர் அனுப்பிய செய்தியில், தம் மகள்கள் படுகொலையான செய்தியை தந்தை தெரிந்துகொண்டார் என்று சொல்லப்படுகிறது.


