யானையிடம் தமிழில் பேசியதாக உறுப்பினர் கூறியதால் மலேசிய நாடாளுமன்றத்தில் சர்ச்சை

யானையிடம் தமிழில் பேசியதாக உறுப்பினர் கூறியதால் மலேசிய நாடாளுமன்றத்தில் சர்ச்சை

2 mins read
a3969278-9454-4700-b50d-3ffc2c830062
தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினரான அப்துல் அஸிஸ் அப்துல் ரஹிம், தமிழ் மொழியை அவமதிக்கும் வகையில் பேசியதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ஆர் எஸ் என் ராயர் (வலது) புகார் கூறினார். படம்: எஃப்எம்டி -

மலேசிய நாடாளுமன்றத்தின் கீழவையில் தேசிய முன்னணி உறுப்பினரும் எதிர்க்கட்சி உறுப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் அமளி ஏற்பட்டதாக 'எஃப்எம்டி' இணைத்தளம் தெரிவித்தது.

தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினரான அப்துல் அஸிஸ் அப்துல் ரஹிம், தமிழ் மொழியை அவமதிக்கும் வகையில் பேசியதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான (ஜெலுத்தோங்) ஆர் எஸ் என் ராயர் புகார் கூறினார். இதனால் சர்ச்சை ஏற்பட்டது.

வனவிலங்கு மசோதா தொடர்பான விவாதத்தின்போது, "யானைகள் மூன்று மொழிகளைப் புரிந்துகொள்ளும். தமிழ், தாய்லாந்து மொழி, பர்மிய மொழி," என்று அஸிஸ் கூறியபோது ராயர் ஆட்சேபித்தார்.

ஆனால், யானையிடம் தமக்கு ஏற்பட்ட அனுபவத்தை தமிழ் நன்கு பேசத் தெரிந்த அஸிஸ் தொடர்ந்து விளக்கினார்.

"ஐயா, ரொம்ப நன்றி, நீங்க இங்க வந்திருக்கீங்க, காட்டுல இருந்து எங்க கம்பத்துக்கு வந்திருக்கீங்க, நீங்க இங்க வந்திருந்தாலும் உங்களுக்கும் கஷ்டம், மக்களுக்கும் கஷ்டம்," என்று தமிழில் அஸிஸ் கூறியபோது இடைமறித்த ராயர், தமிழ் மொழியை அவர் அவமதிப்பதாகக் கூறினார்.

ஆனால், அஸிஸ் தொடர்ந்து பேசியதால் வாக்குவாதம் மூண்டது.

தன்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கூறிய அஸிஸ், "எனக்கு ஏற்பட்ட அனுபவத்தையே நான் விவரிக்கிறேன். என்னுடைய கதையைக் கேட்க விருப்பமில்லாவிட்டால் நீங்கள் வெளியே போகலாம்," என்றார்.

இதற்கு ராயர், மலேசியாவில் தமிழ் பேசத் தெரிந்தவர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். யானையிடம் பேசியதாகக் கூறி தமிழை அஸிஸ் அவமதிக்க அனுமதிக்கக்கூடாது என்றார்.

"அஸிஸ் தமிழை அவமதிக்கவில்லை. அவர் தனது கதையைச் சொல்கிறார்," என்று சபாநாயர் கூறினார்.

இதை ஏற்க மறுத்ததால் ராயர் 10 நிமிடங்களுக்கு வெளியேற்றப்பட்டார்.