சிங்கப்பூர்: ஆசியான் தலைவர்களுடன் நடந்த உயர்மட்டச் சந்திப்புக் கூட்டத்தில் முதன்முதலாக நேற்று கலந்துகொண்டார் ஜப்பானின் புதிய பிரதமர் ஃபூமியோ கிஷிடா. ஆசியான் வட்டார நாடுகளுடன் ஜப்பான் இணைந்து சுதந்திரமான, திறந்த, அமைதியான இந்தோ-பசிபிக் வட்டாரத்தை உருவாக்கச் செயல்படும் என்று அவர் உறுதியளித்தார்.
தென்சீனக் கடல் தொடர்பில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்தும் விமானப் போக்குவரத்தும் இருப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
பரபரப்புடன் செயல்பட்டு வரும் இந்த உத்திபூர்வ நீரிணையால் தொடர்ந்து அதிக அழுத்தம் ஏற்பட்டு வருவதாகவும் வரலாற்று ரீதியாக ஆட்சி உரிமை தனக்கு உள்ளது என்று கூறி அமெரிக்காவும் இதர நாடுகளும் அந்த நீரிணையைச் சுதந்திரமாகப் பயன்படுத்துவதில் சீனா தலையிடுவதாகவும் கூறப்பட்டது.
உலக நாடுகள் தங்களின் கரியமில வாயு வெளியேற்றத்தை ஈடுகட்டும் முயற்சிகள் தொடர்பில் ஜப்பான் உலகளாவிய திட்டங்களை முன்னெடுக்கும் என்றும் திரு கிஷிடா குறிப்பிட்டார். இதற்காக ஆசியான் ஜப்பானுடன் அணுக்கமாகச் செயல்பட வேண்டும் என்று கோரினார்.
இதற்கிடையே, ஆசியான்-ஜப்பான் ஒத்துழைப்பு மேலும் வலுப்பெறவேண்டும் என்று மாநாட்டில் கலந்துகொண்ட சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் கோரினார்.
பருவநிலை மாற்றம் தொடர்பில் ஆசியானும் ஜப்பானும் இணைந்து செயல்படுவதால் தற்போதைய பிரச்சினையைச் சமாளிக்க வழிகள் கண்டறிய முடியும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும், இயற்கை சார்ந்த தீர்வுகளை நடைமுறைப்படுத்த முடியும் என்ற யோசனையை திரு லீ முன்வைத்தார்.
சிறப்பு ஏற்பாடாக ஆசியான், ஜப்பான் மாநாட்டை 2023ஆம் ஆண்டில் நடத்துமாறு திரு கிஷிடா கேட்டுக்கொண்டார். இருதரப்பு உறவின் 50வது ஆண்டு நிறைவாக இம்மாநாடு விளங்கும் என்று அவர் தெரிவித்தார்.
பொதுச் சுகாதார நெருக்கடிகள், புதிதாக ஏற்படும் நோய்கள் தொடர்பில் செயல்பட்டு வரும் ஆசியான் நிலையத்திற்கு ஜப்பான் 50 மில்லியன் அமெரிக்க டாலர் (S$67 மி.) வழங்கியுள்ளதாக குறிப்பிட்டார் திரு லீ.
ஆசியான் நாடுகளுக்கு 16 மில்லியனுக்கும் மேற்பட்ட தடுப்பூசிகளை வழங்க ஜப்பான் உறுதிஅளிப்பதாக திரு கிஷிடா தெரிவித்தார்.

