சிட்னி: அனுமதி பெறாமல் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள முடியாது என்று தன் மக்களுக்கு ஆஸ்திரேலியா விதித்திருந்த தடையை அகற்றுவதாக அரசாங்கம் நேற்று அறிவித்தது.
ஆண்டு இறுதிக்குள் திறன்சார் ஊழியர்கள், அனைத்துலக மாணவர்கள் ஆகியோருக்குத் தன் எல்லையை ஆஸ்திரேலியா திறக்க உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்துலக எல்லைகளை மூடி 18 மாதங்களுக்கு மேலாகியுள்ள நிலையில் கொவிட்-19க்கு எதிராக முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆஸ்திரேலியர்கள், நாட்டை விட்டுப் போக அனுமதி கோரத் தேவையில்லை என்று அந்நாட்டு சுகாதார, உள்துறை விவகார அமைச்சுகள் கூட்டறிக்கை விடுத்தன.
நாட்டில் பெரியவர்களுக்கான இரட்டை தடுப்பூசி விகிதம், அரசாங்கத்தின் 80% இலக்கை நெருங்கும் வேளையில் இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
தற்போது ஆஸ்திரேலியர்களுக்கு வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பில் முன்னுரிமை தரப்படுவதாகக் குறிப்பிட்ட உள்துறை விவகாரங்கள் அமைச்சர் கேரன் ஆன்ட்ரூஸ், தடுப்பூசி விகிதம் அதிகரிக்கும்போது ஆஸ்திரேலியர்கள் அல்லாதவர்களையும் உள்ளடக்கி மேலும் அதிகமான பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்றார்.
கிட்டத்தட்ட 600 நாட்களாக எண்ணற்ற அனைத்துலக விமானப் பயணங்கள் ஆஸ்திரேலியாவில் முடக்கப்பட்டுள்ளன.
பத்தாயிரக்கணக்கிலான ஆஸ்திரேலியர்கள் வெளிநாடுகளிலும் வெளிநாட்டவர்கள் ஆஸ்திரேலியாவிலும் முடங்கிய நிலையில் தங்களின் நண்பர்கள், உறவுகளைக் காண முடியாமல் தவிப்பில் உள்ளனர்.
இதற்கிடையே, 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொவிட்-19க்கு எதிரான 'பூஸ்டர்' தடுப்பூசியைப் போடுவதற்கு நேற்று ஆஸ்திரேலியா ஒப்புதல் அளித்தது.
அத்துடன் 'பூஸ்டர்' தடுப்பூசி போடும் திட்டம் நவம்பர் 8ஆம் தேதிக்கு முன்னதாகவே நடைமுறைப்படுத்தப்படும் என்று அந்நாட்டு சுகாதார அமைச்சர் கிரெக் ஹன்ட் தெரிவித்தார்.

