அமெரிக்க விமான நிலையத்தினுள் மூன்று மாதங்களாக மறைந்து வாழ்ந்த இந்தியர்

அமெரிக்க விமான நிலையத்தினுள் மூன்று மாதங்களாக மறைந்து வாழ்ந்த இந்தியர்

1 mins read
e1d63b35-8320-4a5e-8d16-f21e67b60116
கொரோனா பெருந்தொற்று காரணமாக விமானத்தில் பயணம் செய்ய அஞ்சி, விமான நிலையத்தினுள்ளேயே மறைந்து வாழ்ந்ததாக அந்த ஆடவர் காவல்துறையிடம் தெரிவித்தார். படம்: இபிஏ -

சிகாகோ: திட்டமிட்டபடி நாடு திரும்புவதற்குப் பதிலாக, அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள ஓ'ஹேர் அனைத்துலக விமான நிலையத்தின் உள்ளேயே மூன்று மாதங்களாக மறைந்து வாழ்ந்த இந்தியர் ஒருவர், அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

ஆனாலும், ஆதித்ய சிங், 37, என்ற அந்த ஆடவர், தன்மீதான இன்னொரு குற்றச்சாட்டிற்காக நாளை வெள்ளிக்கிழமை நீதிமன்றத்திற்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாண்டு ஜனவரி 16ஆம் தேதி கைது செய்யப்பட்டார். ஆனாலும், சிகாகோ விமான நிலையப் பாதுகாப்பிற்குப் பொறுப்புடைய போக்குவரத்துப் பாதுகாப்புப் பிரிவு, அவர் விமான நிலைய விதிமுறைகளை மீறவில்லை என்று முடிவுசெய்தது.

முதுகலைப் பட்டதாரியான சிங், ஆறாண்டுகளுக்குமுன் அமெரிக்கா சென்று, கலிஃபோர்னியாவில் வசித்து வந்தார். கடந்த ஆண்டு அக்டோபரில் லாஸ் ஏஞ்சலிசில் இருந்து விமானம் மூலமாக அவர் சிகாகோ சென்றடைந்தார்.

இந்நிலையில், விமான நிலையச் செயல்பாட்டு மேலாளர் ஒருவரின் காணாமல்போன அடையாள வில்லையை சிங் அணிந்திருந்தது கண்டு, இவ்வாண்டு ஜனவரி மாதம் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்கள் இருவர் அவரைக் கண்டுபிடித்தனர்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக விமானத்தில் பயணம் செய்யத் தாம் அஞ்சியதாகவும் அயலவர்கள் உணவு வாங்கித் தந்து தமக்கு உதவியதாகவும் காவல்துறையிடம் சிங் தெரிவித்தார்.