உணவங்காடி நிலையங்களில் விதிமீறிய 38 பேர் பிடிபட்டனர்

உணவங்காடி நிலையங்களில் விதிமீறிய 38 பேர் பிடிபட்டனர்

1 mins read
790ed689-2e8b-4912-aa81-85f59d883ae3
கொரோனா தடுப்பூசி போடாதோர் அல்லது முதல் தவணை தடுப்பூசி மட்டும் போட்டுள்ளோர் உணவங்காடி நிலையங்களில் அமர்ந்து உண்ண அனுமதியில்லை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
Google News Preferred Icon

உணவங்காடி நிலையங்களில் இம்மாதம் 20ஆம் தேதிக்கும் 26ஆம் தேதிக்கும் இடையில் சாப்பிட்டவர்களில் 38 பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் அல்லது முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

பாதுகாப்பு இடைவெளி விதியை நடைமுறைப்படுத்தும் அமலாக்க அதிகாரிகள் மேற்கொண்ட பரிசோதனையின்போது, விதிமீறி அவர்கள் உணவங்காடிகளில் உண்டது தெரியவந்ததாக தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது.

அவர்களின் விவரங்கள் குறித்துக்கொள்ளப்பட்டன. அவர்களுக்கான தண்டனை பற்றிய விவரங்களை வாரியம் வெளியிடவில்லை.

உணவங்காடி நிலையங்களிலும் காப்பிக்கடைகளிலும் முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மட்டுமே சாப்பிட அனுமதிக்கும் நடைமுறை இம்மாதம் 13ஆம் தேதி தொடங்கியது.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் அல்லது ஒரு தடுப்பூசியை மட்டும் போட்டுக்கொண்டுள்ளவர்கள் உணவங்காடிகளில் அமர்ந்து சாப்பிட முடியாது. வேண்டுமானால் உணவை வாங்கிச் செல்லலாம். 12 மற்றும் அதற்கும் குறைந்த வயது சிறார்களுக்கு விதிவிலக்கு உண்டு.

இதனிடையே, உணவங்காடி நிலையங்களில் அக்டோபர் 22ஆம் தேதிக்கும் 24ஆம் தேதிக்கும் இடையில், கொவிட்-19 விதிகளை மீறிய 41 பேர்க்கு எதிராகவும் நடவடிக்கை எடுத்திருப்பதாக வாரியம் நேற்று கூறியது.

குறிப்புச் சொற்கள்