கொவிட்-19 விதிமுறையை அலட்சியப்படுத்துபவர்கள் மீது போலிஸ் கெடுபிடி
பெய்ஜிங்: சீனாவின் வூஹானில் உருவானதாகக் கூறப்படும் கொரோனா தொற்று, உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இருப்பினும் எல்லையைத் திறந்துவிடுவதில் உலக நாடுகள் முனைப்பு காட்டி வருகின்றன.
ஆனால், சீனா மட்டும் தொற்று நெருக்கடி தொடங்கியதில் இருந்து தனது அனைத்துலக எல்லையை இறுக்கமாக மூடிவைத்துவிட்டு கொரோனாவை முற்றிலும் துடைத்தொழிப்பதை இலக்காகக் கொண்டுள்ளது.
இந்நிலையில் சீனாவின் பல பகுதிகளில் கொரோனா தொற்று மீண்டும் தலையெடுக்கத் தொடங்கியுள்ளது. அதையடுத்து சீனா, தொற்றைக் கட்டுப்படுத்த மக்கள் கொவிட்-19 விதிமுறைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
இருப்பினும், பெய்ஜிங் நகரில் உள்ள மக்களில் பலர் கட்டுப்பாடுகளை அலட்சியப்படுத்துவதால் கிருமிப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
சீனாவில் கொவிட்-19 கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு அந்நாட்டுக் காவல்துறையே தண்டனைகளைக் கொடுத்து வருகிறது.
தொற்றுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை அலட்சியப்படுத்தும் போக்கு அங்கு அதிகரித்துள்ளதால் நாட்டில் உள்ள பாதி பகுதிகளில் கொரோனா மீண்டும் தலையெடுக்கத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
அந்நாட்டின் வடமேற்குப் பகுதியில் இயற்கை எழில் சூழ்ந்த சுற்றுலாத் தலங்களைச் சுற்றிப் பார்க்க ஏராளமான உள்நாட்டுச் சுற்றுப் பயணிகள் வருகை தந்தனர். அதனையடுத்து பத்து நாட்களுக்கு முன் அங்கு 200க்கு மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. நேற்று மட்டும் அப்பகுதியில் 34 தொற்றுச் சம்பவங்கள் பதிவானது. பாதிக்கப்பட்டவர்களில் 11 பேருக்கு எவ்விதத் தொற்று அறிகுறியும் இல்லை என்று நேற்று அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன் நாட்டின் 31 மாவட்டங்களில் 14ல் தொற்று பதிவானது.
வடமேற்குப் பகுதியில் காணப்பட்ட தொற்று இப்போது மேற்கில் உள்ள சிச்சுவான் பகுதியிலும் பரவத் தொடங்கியுள்ளது.
ரஷ்யாவின் எல்லையில் உள்ள ஹெய்லொங்ஜியாங் வட்டாரத்தில் முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அங்கு வாழும் 1.58 மில்லியனுக்கும் அதிகமானோர் வீட்டுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அங்கு குற்றங்கள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
கொரோனாவை முற்றிலும் துடைத்தொழிக்க சீனா இலக்கு கொண்டுள்ளது. அவ்வகையில், முகக்கவசம் அணிவது, பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடிப்பது, பயணக் கட்டுப்பாடு போன்றவற்றை அலட்சியப்படுத்துபவர்கள் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்படுகிறது.
சீனாவின் பல பகுதிகளிலும் மக்கள், அரசாங்கத்தின் கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடித்து வருகின்றனர்.
ஆனால், பெய்ஜிங்கில் மட்டும், தொற்றுக்கு எதிரான தடை மற்றும் கட்டுப்பாடுகளை மக்கள் புறக்கணித்து வருவதால் அங்கு தொற்றுப் பாதிப்பு அதிகரித்து வருவதாக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
தொற்றுப் பாதிப்பு அதிகம் உள்ள ஆபத்தான இடங்களுக்குச் சென்று வந்தது பற்றிய விவரங்களை அவர்கள் போலிசுக்குத் தெரியப்படுத்தாதவர்கள், முகக்கவசம் அணிய மறுப்பவர்கள், தொற்றுத் தடமறிதலுக்காக கடைத்தொகுதிகளில் ஸ்கேன் செய்ய மறுப்பவர்கள், தொற்று விதிமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தும் ஊழியர்களைத் தாக்கியவர்கள் என ஏராளமானோர் போலிசாரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இதனை பெய்ஜிங்கில் போலிஸ் பேச்சாளர் பான் ஸுஹோங் தெரிவித்தார்.
முதன்முதலில் சீனாவின் வூஹான் மாநிலத்தில் உருவானதாகக் கூறப்படும் கொரோனா கிருமித்தொற்று உலகம் முழுதும் பரவி உலகத்தையே முடக்கிப் போட்டுள்ளது. இந்நிலையில் சீனா கொரோனாவை, தனது இரும்புக் கரம் கொண்டு கட்டுக்குள் கொண்டுவந்தது. நாடாளவிய நிலையில் மாபெரும் கொரோனா சோதனை இயக்கத்தை நடத்தி, தொற்றைக் கட்டுப்படுத்தியது.
இருப்பினும் இப்போது உலக நாடுகள் தங்கள் எல்லைகளைத் திறக்க முனைந்துள்ள இந்தக் காலகட்டத்திலும் சீனா, எல்லைகளை மூடிவைத்துவிட்டு, கொரோனா தொற்றைத் துடைத்தொழிக்கும் பணியை முடுக்கிவிட்டுள்ளது.