ஆஸ்திரேலியா: அமெரிக்கா, கனடா பயணிகளுக்கு தனிமைப்படுத்தலில்லை
சிட்னி: அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட பல நாடுகளுக்கு தனது வெளிநாட்டுப் பயணிகளுக்கான விதிமுறைகளைத் தளர்த்துவதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. இதன் மூலம் அந்நாடுகளில் இருந்து வரும் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள், ஆஸ்திரேலியா வந்திறங்கியதும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை. இதன் மூலம் பாதுகாப்பான முறையான ஆஸ்திரேலியாவை உலக நாடுகளுக்குத் திறந்துவிடுவதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மெரிஸ் பெய்னி நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார். தொற்று நெருக்கடியால் 18 மாதங்களாக மூடிக்கிடந்த தனது அனைத்துலக எல்லையை அடுத்த வாரம் முதன்முதலாகத் திறந்துவிடுகிறது ஆஸ்திரேலியா.
அமெரிக்க விமான நிலையத்தினுள்
3 மாதம் மறைந்து வாழ்ந்த இந்தியர்
சிகாகோ: திட்டமிட்டபடி நாடு திரும்புவதற்குப் பதிலாக, அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள ஓ'ஹேர் அனைத்துலக விமான நிலையத்தின் உள்ளேயே மூன்று மாதங்களாக மறைந்து வாழ்ந்த இந்தியர் ஒருவர், அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
ஆனாலும், ஆதித்ய சிங், 37, என்ற அந்த ஆடவர், தன்மீதான இன்னொரு குற்றச்சாட்டிற்காக நாளை வெள்ளிக்கிழமை நீதிமன்றத்திற்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாண்டு ஜனவரி 16ஆம் தேதி கைது செய்யப்பட்டார். ஆனாலும், சிகாகோ விமான நிலையப் போக்குவரத்துப் பாதுகாப்புப் பிரிவு, அவர் விமான நிலைய விதிமுறைகளை மீறவில்லை என்று முடிவுசெய்தது.
முதுகலைப் பட்டதாரியான சிங், ஆறாண்டுகளுக்குமுன் அமெரிக்கா சென்று, கலிஃபோர்னியாவில் வசித்து வந்தார். 2020 அக்டோபரில் லாஸ் ஏஞ்சலிசில் இருந்து விமானம் மூலம் சிகாகோ சென்றடைந்தார். கொரோனா காரணமாக விமானத்தில் பயணம் செய்யத் தாம் அஞ்சியதாகவும் மற்றவர்கள் உணவு வாங்கித் தந்து தமக்கு உதவியதாகவும் காவல்துறையிடம் சிங் தெரிவித்தார்.


