சிட்னி: ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் அதிகமனோர் தடுப்பூசி போட்டுக் கொண்டு வருவதால் கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.
ஆனால் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. ஒரு நாள் தொற்றுச் சம்பவங்கள் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,656 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பத்து பேர் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர்.
ஒட்டுமொத்தமாக 23,730 'டெல்டா' கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் பெரும்பாலானவை தலைநகர் மெல் பர்னைச் சேர்ந்தவை.
இதற்கிடையே 16 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகையில் 78 விழுக்காட்டினர் முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளதாக நேற்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் எண்பது விழுக்காட்டை கூடிய விரைவில் எட்டிவிடுவோம் என்று விக்டோரியா மாநிலம் நம்பிக்கைதெரிவித்தது. தடுப்பூசி இலக்கை எட்டுவதால் நேற்று மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
வெளியிடங்களில் இனி மக்கள் முகக்கவசம் அணிய வேண்டியிருக்காது. உடற்பயிற்சிக் கூடங்கள், மதுபானக் கூடங்கள், உணவகங்கள், சிகை அலங்கார நிலையங்கள் உள்ளிட்டவை திறக்க அனுமதிக்கப்படும். மெல்பர்னிலிருந்து மற்ற இடங்களுக்கு பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும். பல மாதங்களுக்குப் பிறகு மாணவர்களும் பள்ளிக்குத் திரும்பலாம்.
அண்டை மாநிலமான நியூ சவுத் வேல்ஸில் 268 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். வியாழக்கிழமை வரையிலான 24 மணி நேரத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டு இருவர் உயிரிழந்தனர். இந்த மாநிலத்தில் 86.5 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுள்ளனர். குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் புதிய தொற்றுச் சம்பவங்கள் பதிவாகவில்லை.