வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அடுத்த வாரம் நடக்கவிருக்கும் முக்கிய ஐநா பருவநிலை மாற்றம் தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க நேற்று ஐரோப்பா வந்து சேர்ந்தார். அவரது உத்தேச பருவநிலை மாற்றம் தொடர்பான கொள்கை திட்டத்தை இன்னமும் அமெரிக்க நாடாளுமன்றம் ஏற்கவில்லை. ஐநூறு பில்லியன் டாலர் பசுமை கொள்கைகளுக்கு செல வழிப்பது உட்பட 1.75 டிரில்லியன் டாலர் சமூக நலத் தொகுப்பை அதிபர் ஜோ பைடன் முன்வைத்துள்ளார். ஆனால் அவரது ஜனநாயகக் கட்சியிலேயே கருத்தொற்றுமை ஏற்படாததால் ஐநா உச்சநிலை மாநாட்டுக்கு முன்பு அத் திட்டம் நாடாளுமன்றத்தில் நிைற வேறுவது சிரமம் என்று கூறப்படு கிறது.
வாஷிங்டனிலிருந்து புறப் படுவதற்கு முன்பு பேசிய அதிபர் பைடன், அந்தத் திட்டத்தை வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று வருணித்தார்.
"மில்லியன் கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும், பொருளியல் வளர்ச்சி மேம்படும், நமது நாட்டில் நமது மக்கள் மீது செய்யப்படும் முதலீடு, பருவநிலை மாற்ற நெருக்கடியை வாய்ப்புகளாக மாற்றும். 21ஆம் நூற்றாண்டில் சீனா மற்றும் முக்கிய நாடுகளுக்கு எதிராக பொருளியல் போட்டியில் வெற்றி பெற முடியும்," என்று தனது திட்டத்தை அதிபர் பைடன் தற்காத்துப் பேசியுள்ளார். வரும் திங்கட்கிழமை கிளாஸ்கோவில் பருவநிலை மாற்றம் தொடர்பான உச்ச நிலை மாநாடு தொடங்குவதற்கு முன்பு சமூக நலத்தொகுப்பை நாடாளுமன்றம் அங்கீகரிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். அதிபர் பைடன், ஐரோப்பிய பயணத்தின் முதல் கட்டமாக நேற்று வத்திகன் வந்து சேர்ந்தார். அங்கு போப்பாண்டவரைச் சந்தித்து ஒரு மணி நேரத்திற்கு மேல் பேசினார்.

