'ஜி20' உச்சநிலை மாநாட்டில்
சீன அதிபர் ஸி பங்கேற்பு
பெய்ஜிங்: ரோமில் இன்றும் நாளையும் நடைெபறும் 'ஜி20' நாடுகளின் உச்சநிலை மாநாட்டில் சீன அதிபர் ஸி ஜின்பிங் பங்கேற்கிறார். காணொளி வழியாக அவர் கலந்து கொள்வார் என்று ேநற்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சு அறிக்கை வாயிலாக தெரிவித்தது. மாநாட்டில் அவர் உரையாற்றுவார் என்றும் அறிக்கை குறிப்பிட்டது.
அதிபர் ஸி, கொள்ளைநோய் பரவலுக்குப் பிறகு 2020ஆம் ஆண்டிலிருந்து நாட்டைவிட்டு வெளியேற வில்லை. 'ஜி20' பணக்கார நாடுகளின் மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், ஜப்பானிய பிரதமர் ஃபூமியோ கிஷிடா ஆகியோரும் நேரடியாக கலந்துகொள்ளவில்லை.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் இதில் பங்கேற்கிறார்.
குழந்தைகளுக்காக தடுப்பூசிகளை
வாங்கும் மலேசிய அரசாங்கம்
கோலாலம்பூர்: மலேசியா அரசாங்கம், ஐந்து முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்குத் தடுப்பூசி போட ஃபைசர், பயோஎன்டெக் தடுப்பூசிகளை வாங்கப் போவதாக தெரிவித்துள்ளது. ஐந்து வயது முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி போடலாம் என்று அமெரிக்க நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. இதையடுத்து குழந்தைகளுக்குத் தடுப்பூசி போட மலேசிய அரசு முடிவெடுத்துள்ளது.
உலக சுகாதார நிறுவனத்துக்கு
பணம் போதவில்லையாம்
வாஷிங்டன்: சீனாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் உட்பட சில தடுப்பூசிகளை மட்டும் அங்கீகரித்துள்ள உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானாம் இன்னமும் பணம் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார். கொவிட்-19க்கு எதிரான திட்டத்தில் வெற்றி பெற அடுத்த 12 மாதங்களுக்கு 23.4 பில்லியன் டாலர் ($31.45) நிதி தேவைப்படுதாக அவர் கூக்குரலிட்டுள்ளார். இதற்கு ஜி-20 தொழில்மய நாடுகள் உதவ வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். கொள்ளைநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை நாடுகளை கைவிடக்கூடாது என்றும் கண்ணீர்விடாத குறையாக டெட்ரோஸ் அதனாம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சூச்சி உதவியாளருக்குச் சிறை
யங்கூன்: மியன்மாரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அடாவடி அரசாங்கத்தை நடத்திவரும் ராணுவம், முன்னாள் அரசாங்க ஆலோசகரான ஆங் சான் சூச்சியின் மூத்த உதவியாளர் வின் டியனுக்கு, 79, இருபது ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேச துரோகம் குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டது. ஓய்வு பெற வேண்டிய வயதில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள ராணுவத் தலைவர் மின் அவூங் ஹிலைங்கை ஆசியான் நாடுகள் புறக்கணித்துள்ளன.

