இந்த நாட்டில் முதல் கொவிட்-19 பாதிப்பு இப்போதுதான் பதிவாகியது

இந்த நாட்டில் முதல் கொவிட்-19 பாதிப்பு இப்போதுதான் பதிவாகியது

1 mins read
ea499df8-e9df-4bfd-89e4-7572e9648fdd
டொங்கா மக்கள் பலரும் இன்று சனிக்கிழமை (அக்டோபர் 30) தடுப்பூசி நிலையங்களுக்குப் படையெடுத்தனர். படம்: ஏஎஃப்பி -

கொவிட்-19 பெருந்தொற்று தொடங்கி ஒன்றரை ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டது. உலகம் முழுவதும் பில்லியன் கணக்கானோர் கிருமித்தொற்றுக்கு ஆளாகினர், கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் பேர் உயிரிழந்துவிட்டனர்.

விரலைவிட்டு எண்ணக்கூடிய சில நாடுகளே இதுவரை கொவிட்-19 தொற்றிலிருந்து தப்பித்து வந்துள்ளன. ஆனால், சுருங்கிவரும் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள டொங்கா எனும் சிறிய நாட்டில் இப்போதுதான் முதல் கொவிட்-19 பாதிப்பு பதிவாகியுள்ளது.

நியூசிலாந்துக்கு வடகிழக்கில் ஏறத்தாழ 1,800 கிலோமீட்டர் தூரத்தில் டொங்கா அமைந்துள்ளது.

இந்நிலையில், நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரிலிருந்து புறப்பட்டு விமானத்தில் டொங்கா திரும்பிய 215 பயணிகளில் ஒருவருக்குக் கிருமித்தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டது.

முதல் தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்ட உடனே, டொங்கா நாட்டின் பிரதான தீவு ஒன்று முடக்கப்படலாம் என்று மக்களை அரசாங்கம் எச்சரித்துள்ளது. அந்தத் தீவில்தான் நாட்டு மக்களில் பெரும்பாலானோர் வசிக்கின்றனர்.

இதையடுத்து, அந்நாட்டு மக்கள் பல்லாயிரக்கணக்கானோர் இன்று சனிக்கிழமை (அக்டோபர் 30) தடுப்பூசி நிலையங்களுக்குப் படையெடுத்தனர்.

டொங்காவின் மக்கள்தொகை 106,000. அவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே இதுவரை கொவிட்-19க்கு எதிராக முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்