பாலி: பாலி தீவில் உள்ள ஆடம்பர ஹோட்டலில் தனது தாயை காதலன் அடித்துக் கொல்ல உதவியதற்காக பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஹைதர் மேக், நன்னடத்தையின் கீழ் கடந்த வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டார். இதனால் கொல்லப்பட்ட திருமதி ஷெய்லா வோன் வியஸ் மேக்கின் உறவினர்கள் அதிர்ச்சிஅடைந்துள்ளனர்.
ஷெய்லாவை இரக்கமற்ற வகையில் கொலை செய்ய மூளையாக இருந்தவரே ஹைதர்தான், அவளுக்கு எப்படி தண்டனையைக் குறைக்கலாம் என்று திருமதி ஷெய்லாவுடன் பிறந்த திரு பில் வியஸ், திருவாட்டி டெப்பி கரன் ஆகியோர் கேள்வியெழுப்பியுள்ளனர்.
2014ஆம் ஆண்டில் இந்தக் கைப்பெட்டி கொலை வழக்கு உலக முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அப்போது 19 வயதான ஹைதர் மேக், தனது தாயாருடனும் காதலனுடனும் விடுமுறைக்காக பாலி தீவுக்கு வந்தார்.
அவர்கள் மூவரும் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தனர். அந்த சமயத்தில் மகள் கர்ப்பம் அடைந்ததை அறிந்த செல்வந்தரான ஷெய்லா வோன் வியஸ் மேக், மகளின் காதலன் டோமி ஷேஃபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது பழங்கள் வைக்கும் கோப்பையால் 62 வயது ஷெய்லாவை அடித்தே டாமி ஷேஃபர் கொன்றுவிட்டார். பின்னர் இருவரும் திருமதி ஷெய்லாவின் உடலை ஒரு கைப்பெட்டியில் அடைத்து டாக்சியில் வைத்துவிட்டுச் ெசன்றுவிட்டனர்.
மற்றொரு ஹோட்டலில் பதுங்கியிருந்த இருவரையும் பாலி தீவு போலிசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் கொலை செய்ததற்காக ஷேஃபருக்கு 18 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் உடந்தையாக இருந்ததற்காக ஹைதர் மேக்குக்கு பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
ஹைதரின் நன்னடத்தை காரணமாக அவரது தண்டனைக் காலம் ஏழு ஆண்டுகளுக்கு குறைக்கப்பட்டதாக வெள்ளிக்கிழமை அன்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்காவுக்கு ஹைதர் மேக் திருப்பி அனுப்பட்டார் என்று தெரி விக்கப்பட்டது.