மலாக்கா: சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி அரசியல் தலைவர்கள் மலாக்கா மாநிலத்தில் மறைமுக பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். வாக்காளர்களைக் கவர நேரடி பிரசாரத்தில் இறங்க அண்மையில் விதிக்கப்பட்ட தடை அவர்களைத் தடுக்கிறது.
தேர்தல் தொடர்பான ஒன்று கூடல்களுக்கு மலேசியா சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் தடை விதித்து கடந்த வாரம் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். இம்மாதம் 20ஆம் தேதி நடைபெற இருக்கும் தேர்தல் தொடர்பான விதிமுறைகளை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் பிரதமர்கள் நஜிப் ரசாக்கும் முகைதீன் யாசினும் நேற்று முன்தினம் சில இடங்களுக்குச் சென்றனர். தமது வருகை தேர்தல் தொடர்பானது அல்ல என்று திரு நஜிப் கூறினார். "மலாக்காவில் எனது பழைய நண்பர்களைச் சந்திக்க வந்துள்ளேன். இதனை தேர்தல் பிரசாரமாகக் கருதக்கூடாது," என்று கம்போங் ஹைலாம் மீனவர் படகுத்துறைக்கு வருகை அளித்தபோது திரு நஜிப் கூறினார். முற்பகல் 11 மணியளவில் தமது மறைமுகப் பிரசார நட
வடிக்கைகளைத் தொடங்கிய அவர், கிளபாங் இரவுச் சந்தைக்கும் சென்றார். அதேபோல முகைதீன் யாசின் காலை 10 மணி முதல் இரவு 10.45 மணி வரை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மஜித் தானாவிலுள்ள உணவங்காடி நிலையத்தில் அவர் தமது பயணத்தைத் தொடங்கினார்.
நேரடி ஒன்றுகூடல்களுக்குத் தடை விதிக்கப்பட்டதால் இணையத்தில் பிரசாரம் தீவிரமடைந்து உள்ளது. அந்தப் பிரசாரம் தனிநபர்களின் பெயரைக் குறிப்பிட்டு தாக்குவதும் ஒருவருக்கொருவர் சேற்றை வாரி இறைக்கும் வகையிலும் நடைபெறுவதாக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. அதனைக் கவனத்தில் கொண்ட மலாக்கா காபந்து அரசாங்க முதல்வரான சுலைமான் முகம்மது அலி, தமது கட்சியினர் இணையத்தில் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம் என தடை விதித்துள்ளார். லெண்டு சட்டமன்ற உறுப்பினரான அவர், எதிர்த்தரப்பினர் மீதோ அரசு கவிழக் காரணமான 4 எம்எல்ஏக்கள் மீதோ இணையப் பிரசாரத்தில் பெயர் குறிப்பிட்டு தாக்கவேண்டாம் என்று அவர் தமது கட்சியினரிடம் கூறியுள்ளார்.
இந்த நான்கு எம்எல்ஏக்கள் ஆதரவை விலக்கியதன் காரணமாக அக்டோபர் 4ஆம் தேதி மலாக்கா அரசாங்கம் கவிழ்ந்தது.
"நமக்கு மேல் ஒருவர் இருக்கிறார். நமது வெற்றி தோல்வியை அவர் தீர்மானிப்பார். அதனால் எவரையும் பெயர் குறிப்பிட்டு தாக்கிப் பிரசாரம் செய்ய வேண்டாம்.
"வெற்றி, தோல்வி என்பது தேர்தலில் தவிர்க்க முடியாதவை. அதற்காக மக்கள் மனதில் எதிர்த்
தரப்பினரைப் பற்றிய தவறான எண்ணங்களை ஏற்படுத்த வேண்டாம்," என செய்தியாளர்களிடம் பேசுகையில் திரு சுலைமான் கூறினார்.

