ரோம்: தைவான் நீரிணை வட்டாரத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ள சீனாவின் நடவடிக்கைகளை அமெரிக்கா எதிர்க்கிறதென அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூறியதாக மூத்த வெளியுறவுத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார். ஜி-20 மாநாட்டில் பங்கேற்க இத்தாலியின் ரோம் நகருக்கு வருகையளித்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியுடன் திரு பிலிங்கன் நேற்று சுமார் ஒரு மணி நேரம் பேச்சு நடத்தினார்.
தைவான் விவகாரத்தில் பெய்ஜிங் ஒருதலைபட்சமாக மேற்கொள்ளும் மாற்றங்களை வாஷிங்டன் எதிர்ப்பதாக அச்சந்திப்பின்போது திரு பிளிங்கன் தெள்ளத்தெளிவாகக் கூறிவிட்டார் என்றார் அந்த அதிகாரி. தைவான் வான்வெளி தற்காப்பு வட்டாரத்தில் சீனாவின் ராணுவ நடவடிக்கைகள் அண்மைக் காலமாக அதிகரித்து வருவதை சீனாவின் ராணுவத் தொல்லை என தைப்பே தெரிவித்துள்ளது. தைவான் தமது சொந்த ஆட்சிப் பிரதேசம் என்றும் இங்கு மேற்கொள்ளப்படும் எந்தவொரு வெளிநாட்டுத் தலையீடும் தமது உள்நாட்டு விவகாரத் தலையீடாகக் கருதப்படும் என சீனா கூறி வருகிறது. இரு பெரிய பொருளியல் நாடுகளுக்கு இடையில் எழுந்திருக்கும் தீவிரப் போட்டியை பொறுப்புணர்வுடன் கையாளவே அமெரிக்கா விரும்பு கிறது என அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரி கூறினார்.
பிற நாடுகளைப் போலவே தைவானுடன் அமெரிக்காவுக்கு முறையான உறவு கிடையாது என்றபோதிலும் அனைத்துலக விவகாரங்களில் வாஷிங்டனை தைவான் ஆதரிப்பதோடு அமெரிக்காவிடம் அது ஆயுதங்களை வாங்கி வருகிறது. சீனா தாக்குதல் தொடுத்தால் தைவானைப் பாதுகாக்க ராணுவத் தலையீட்டை மேற்கொள்ளலாமா என்பதில் தெளிவற்ற நிலையையே அமெரிக்கா கடைப்பிடித்து வருகிறது.

