சிட்னி: ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கொவிட்-19 தொற்று தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் அங்குள்ள 16 வயதுக்கு மேற்பட்ட மக்களில் 80 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை நள்ளிரவு வரையிலான 24 மணி நேரத்தில் விக்டோரியா மாநிலத்தில் 1,036 புதிய தொற்றுச் சம்பவங்கள் பதிவாயின. இந்த எண்ணிக்கை வெள்ளிக்
கிழமை இரவில் 1,355ஆகவும் வியாழக்கிழமை இரவில் 1,656 ஆகவும் பதிவாயின. ஒவ்வொரு நாளும் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை சரிந்து வருகிறது.
தற்போதைய நிலவரப்படி 702 கொவிட்-19 நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 128 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் 80 பேருக்கு உயிர்வாயு உதவி தேவைப்படுகிறது. சனிக்கிழமை நள்ளிரவு வரையிலான 24 மணிநேரத்தில் தொற்று காரணமாக 12 பேர் உயிரிழந்துவிட்டனர். இவர்களையும் சேர்த்து இந்த மாநிலத்தில் 305 பேர் கொவிட்-19 தொற்றுக்குப் பலியாகிவிட்டனர்.
இதற்கிடையே, ஆஸ்திரேலியா வின் மற்றொரு மாநிலமான நியூ சௌத் வேல்சில் 177 புதிய தொற்றுச் சம்பவங்களும் ஒரு தொற்று மரணமும் பதிவாகி உள்ளன. அதிகம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதன் காரணமாக இந்த மாநிலத்தில் குறைவான அளவிலேயே தொற்று பதிவாகி வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.