நெட்ஃப்ளிக்ஸ் இணையக் காணொளி ஒளிபரப்புச் சேவை, அதன் சந்தாதாரர்களுக்கு இலவச திறன்பேசி விளையாட்டுகளை அறிமுகம் செய்துள்ளது. ‘ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்’ (Stranger Things) என்ற திகில் காணொளித் தொடரை மையப்படுத்தும் இரண்டு விளையாட்டுகளும் வேறு வகையான மூன்று விளையாட்டுகளும் அறிமுகம் செய்யப்படும் என்று 'சிலிக்கான் வேலி'யில் தளம் கொண்டுள்ள நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் தெரிவித்தது.
“உலகளவிலான இந்த வெளியீட்டுக்கான முதல் அடியை வைக்க ஆவலாய் உள்ளோம்,” என்று அந்நிறுவனம் தனது செய்தியாளர் அறிக்கையில் குறிப்பிட்டது.
ஆண்ட்ராய்ட் திறன்பேசி பயனாளர்கள் தங்களது நெட்ஃப்ளிக்ஸ் கணக்குகளின் வழியாக இந்த விளையாட்டுகளை விளையாடலாம். ஆனால் ஐபோன்களில் இந்த விளையாட்டுகள் இயங்குமா என்பது வெளியிடப்படவில்லை.
திறன்பேசி விளையாட்டுச் சந்தையில் நுழையப்போவதாக இவ்வாண்டு ஜூலை மாதத்தில் கூறியிருந்த நெட்ஃப்ளிக்ஸ், அதற்காக ‘நைட் ஸ்கூல்’ விளையாட்டு வடிவமைப்பு அரங்கத்தை வாங்கியது.