லாஸ் ஏஞ்சலிஸ்: அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் உள்ள ஹியூஸ்டன் நகரில் நடைபெற்ற 'ஆஸ்ட்ரோவர்ல்ட்' இசை விழாவின் முதல் நாளில் குறைந்தது எட்டுப் பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலர் காயமடைந்த இவ்விழாவில் மக்கள் நெரிசல் ஏற்பட்டதால் சிலர் நசுக்கப்பட்டு மரணமடைந்ததாக அதிகாரிகள் கூறினர்.
அமெரிக்க நேரப்படி நேற்று முன்தினம் இரவு சுமார் ஒன்பது மணிக்குப் பிரபல 'ராப்' பாடகர் ட்ராவிஸ் ஸ்காட்டின் இசை விருந்தைக் காண கூட்டம் கூடியது. அவர் இருந்த மேடையை நோக்கி மக்கள் ஒருவரையொருவர் தள்ளியபடி சென்றதால் பதற்றம் ஏற்பட்டது, சிலர் காயமடைந்தனர். அதற்குப் பிறகு சுமார் 9.38 மணிக்கு நிலைமை களேபரமாக மாறியது, சிலர் மயக்கமடைந்தனர். பலர் உயிரிழக்கக்கூடிய நிலை உருவெடுத்தது. மீட்புப் பணியாளர்கள் குறைந்தது 17 பேரை மருத்துவமனைகளுக்குக் கொண்டுசென்றனர். அவர்களில் குறைந்தது 11 பேருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. நிலைமை இவ்வளவு மோசமடைந்ததற்கான காரணங்கள் தெளிவாகத் தெரியவில்லை.
நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள், பாடகர் ஸ்காட் இருதரப்பும் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்கிவருவதாகத் தெரிவிக்கப்பட்டது. பல ரசிகர்கள் சிரமப்படுவதைக் கண்ட ஸ்காட், தனது படைப்பைப் பல முறை நிறுத்தியதாக சில ஊடகங்கள் கூறின.
அவரது படைப்பு 75 நிமிடங்கள் நீடித்தது. அவசர உதவி வழங்கும் வாகனங்கள் பல முறை கூட்டத்திற்கு நடுவே சென்றன. திடீர் ஒளியும் அபாய ஒலியும் அவ்வப்போது இடம்பெற்றன.
இவ்விழாவில் 50,000 பேர் திரண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. 'ஆஸ்ட்ரோவர்ல்ட்' இசை விழா இரண்டு நாட்கள் நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இரண்டாம் நாள் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.