தமிழகத்தில் உள்ள மகன்களை மீண்டும் சந்திக்க ஏங்கும் பணிப்பெண்

தமிழகத்தில் உள்ள மகன்களை மீண்டும் சந்திக்க ஏங்கும் பணிப்பெண்

2 mins read
20fb7778-4eee-4522-86f8-ff1ef63c3b67
திருவாட்டி சுஜா காளியப்பன் (படம்), தமிழகத்தில் உள்ள தம் குடும்பத்தாருடன் இணைய முடியாதது குறித்த வேதனையைப் பகிர்கிறார். படம்: சுஜா காளியப்பன் -

கொவிட்-19 பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து தாயகம் திரும்ப இயலாமல் தவிக்கும் பலரிடையே இல்லப் பணிப்பெண்களும் அடங்குவர். அவர்களில் ஒருவரான திருவாட்டி சுஜா காளியப்பன், 39, தமிழகத்தில் தம் குடும்பத்தாருடன் இணைய முடியாதது குறித்த வேதனையை இங்கு பகிர்கிறார்.

கணவருடன் மணமுறிவு செய்துகொண்ட இவருக்கு 18 மற்றும் 20 வயதில் இரு மகன்கள் உள்ளனர். ஏறக்குறைய மூன்றாண்டுகளாக சிங்கப்பூரில் இவர் பணியாற்றுகிறார்.

கடைசியாக 2019 நவம்பரில் தமிழகத்தின் கன்னியாகுமரிக்கு இவர் சென்று வந்தார். அதற்குப் பிறகு மகன்களை மீண்டும் சந்திக்க முடியவில்லை.

கொவிட்-19 நிலவரம் மேம்பட்டவுடன், சிறிது காலத்திற்காவது தாயகம் சென்றுவர முதலாளி தமக்கு விடுப்பு தருவதை திருவாட்டி சுஜா எதிர்பார்த்து இருக்கிறார்.

இல்லாவிட்டால், ஈராண்டுகால பணி ஒப்பந்தம் முடிவடையும்வரை இவர் காத்திருக்க வேண்டியிருக்கும். கடந்த ஆகஸ்ட் மாதத்தில்தான் தற்போதைய முதலாளிக்கு இவர் பணியாற்றத் தொடங்கினார்.

"கல்லூரி செல்லும் என் மகன்களின் வாழ்வில் இது முக்கியமாக காலகட்டம். நான் தாயகம் செல்வது சிறிது காலமாக இருந்தாலும்கூட, மகன்களுடன் நேரம் செலவிடவும் அவர்களுக்கு உதவவும் முடியும். கல்லூரிக்காக அவர்கள் காற்பந்து விளையாடுவதையும் நான் காணலாம்," என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் திருவாட்டி சுஜா கூறினார்.

இதற்கு முன்னால் வேறொரு முதலாளிக்கு இவர் பணிபுரிந்தபோது, உள்ளூர் அதிகாரிகளுடன் ஏதோ ஒரு விவகாரம் ஏற்பட்டது. அது சரிசெய்யப்பட்டவுடன், தாயகம் திரும்ப இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

எனினும், சிங்கப்பூரில் தொடர்ந்து இருக்க இவர் முடிவெடுத்தார். தாயகம் திரும்பிவிட்டால், கொவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக மீண்டும் சிங்கப்பூருக்கு வர முடியாமல் போய்விடுமோ என்ற அச்சம் இவருக்கு ஏற்பட்டது.

இல்லப் பணிப்பெண்ணாக பணியாற்ற சிங்கப்பூர் வருவதற்கு முன்பு, தமிழகத்தின் நாகர்கோவிலில் இளம் மாதர் கிறிஸ்துவச் சங்கத்தில் பாதுகாவலராக திருவாட்டி சுஜா பணியாற்றினார்.

பணிப்பெண்ணாக தற்போது கிடைக்கும் சம்பளத்தில் கால்வாசி மட்டுமே அப்போது இவருக்குக் கிடைத்தது.

தம் மகன்களுடன் தொலைபேசியில் தினந்தோறும் இவர் உரையாடுகிறார். எனினும், அவர்களை விரைவில் நேரில் சந்திக்க இவர் ஏங்குகிறார்.

"எனது சம்பளத்தைக் கொண்டு என் மகன்களின் கல்லூரிக் கட்டணத்தைச் செலுத்துகிறேன். என் தாயாருக்கும் நான் நிதியாதரவு வழங்குகிறேன். இதர செலவுகளுக்கும் நான் கைகொடுக்கிறேன்.

"என் மகன்களைக் காண ஏங்குகிறேன். ஒருவேளை நான் அப்போது இந்தியாவுக்குச் சென்றிருந்தால், எப்போது நான் இங்கு மீண்டும் வர முடியும் என்பது யாருக்குத் தெரியும்? எனது குடும்பத்தின் நிதிச் சூழலால், நான் இங்கு இருக்க வேண்டியுள்ளது," என்றார் திருவாட்டி சுஜா.

குறிப்புச் சொற்கள்