சிட்னி: கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு ஆளாகும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள், தீவிர சிகிக்சை பிரிவில் அனுமதிக்கப்படுவதற்கோ, மாண்டு போவதற்கான ஆபத்தோ 16 மடங்கு அதிகம் என்று ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே கிருமித்தொற்றை ஆஸ்திரேலியா நிரந்தர நோயாகக் கையாளத் தொடங்கியுள்ள இவ்வேளையில், தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு மக்களை அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.
தடுப்பூசி போட்டுக்கொண்டோர் விகிதம் 80 விழுக்காட்டை நெருங்கியவுடன் சிட்னி, மெல்பர்ன், கான்பரா ஆகிய நகரங்களில் நீடித்த நீண்ட நாள் முடக்கநிலை தளர்த்தப்பட்டது.
அக்டோபர் மாத முற்பகுதி வரையிலான நான்கு மாதங்களில் 412 பேர் கிருமித்தொற்றால் மாண்டனர். அவர்களில் 11 விழுக்காட்டினர் மட்டுமே முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் என்றும் அவர்களின் சராசரி வயது 82 எனவும் நியூ சவுத் வேல்ஸ் மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுவோரில் மூன்று விழுக்காட்டினர் மட்டுமே முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் என்கிறது அறிக்கை.
அதுபோல் ஜூன் 16ஆம் தேதிக்கும் அக்டோபர் 7ஆம் தேதிக்கும் இடையில் தொற்றுக்கு ஆளான 61,800 பேரில் 63 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் என்பதும் தெரிய வந்து உள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக மாண்டு போவதற்கான ஆபத்து 11 மடங்கு அதிகம் உள்ளதாக சென்ற செப்டம்பர் மாதம் அமெரிக்கா கூறியது.