ரயில் தாமதமானதால் $0.67 சம்பளப் பிடித்தம்; $26,000 இழப்பீடு கோரும் ஓட்டுநர்

2 mins read
3431f5be-f859-4ec3-8204-2bc4ab1c7269
படம்: ஏஎஃப்பி -

தோக்கியோ: ஜப்பானில் ரயில் ஒன்று ஒரு நிமிடம் தாமதமாக செல்ல காரணமான ரயில் ஓட்டுநரின் சம்பளத்தில் 56 யென் ($0.67) தொகை பிடிக்கப்பட்டதை எதிர்த்து, கிட்டத்தட்ட $26,000 இழப்பீடு கேட்டு அந்த ஓட்டுநர் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஓட்டுநருக்குப் பணியில் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக ரயில் தாமதமாகச் செல்ல நேரிட்டதால் மேற்கு ஜப்பான் ரயில் நிறுவனம், அவருக்கு அபராதம் விதித்தது.

ஜப்பானின் ஒகயாமா நிலையத்தில், குறிப்பிட்ட நடைமேடைக்குச் சென்று ஆளில்லா ரயிலை இயக்குவதற்காக, வேறோர் ஓட்டுநரிடமிருந்து அவர் பணிமாற்று பொறுப்பை ஏற்கவேண்டியிருந்தது. ஆனால் அவர் தவறான நடைமேடையில் ரயிலை நிறுத்திவிட்டார்.

அவர் இயக்க வேண்டிய ரயில், வேறொரு நடைமேடையை அடைந்த பிறகுதான், ஓட்டுநர் தனது தவற்றை உணர்ந்தார்.

அவர் உடனடியாக அந்த நடைமேடைக்கு விரைந்தாலும், பணிமாற்று பொறுப்பை ஏற்பதற்கு தாமதமாகிவிட்டது. அதைத்தொடர்ந்து அந்த ரயிலை உரிய இடத்திற்குக் கொண்டு சேர்க்க, நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைவிட ஒரு நிமிடம் தாமதமானது.

இதற்காக ஓட்டுநரின் சம்பளத்தில் இருந்து 56 யென் பிடிக்கப்பட்டது.

ஆனால், அந்த ஓட்டுநர் இதை ஏற்கவில்லை. ரயில் காலியாக இருந்ததால், கால அட்டவணையில் எந்தச் சிக்கலும் ஏற்படவில்லை, பயணிகளுக்கு எவ்வித உண்மையான இடையூறும் ஏற்படவில்லை என்று வாதிட்டார்.

ஆனால், நிறுவனமும் விடவில்லை. ஊழியரின் தாமதத்துக்கு 'வேலை செய்யவில்லை என்றால் ஊதியம் கிடையாது' என்ற கொள்கையைப் பயன்படுத்தியதாகக் கூறியது. அவர் தவறான நடைமேடையில் ரயிலை நிறுத்தியதை, வேலை செய்யாமல் இருந்ததாக கருத்திற்கொண்டது நிறுவனம்.

இதுதொடர்பாக தனக்கு ஏற்பட்ட மனஉளைச்சலக்கு 2.2 மில்லியன் யென் இழப்பீடு கேட்டு கடந்த மார்ச் மாதம் ஒகயாமா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஜப்பானின் ரயில் நிர்வாகம் அதன் நம்பகத்தன்மைக்குப் பெயர் பெற்றது. 2017ஆம் ஆண்டில், ஒரு ரயில் நிறுவனம் 20 வினாடிகள் முன்னதாக ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றதற்காக மன்னிப்புக் கோரியது.

குறிப்புச் சொற்கள்