ஜெர்மனியில் கிருமிப் பரவல் தொடர்ந்து நான்காவது நாளாக அதிகரிப்பு
பெர்லின்: ஜெர்மனியில் கிருமித்தொற்று மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில், இந்த நான்காம் அலையைத் தடுக்கவில்லை என்றால் அதிகமானோர் உயிரிழக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
அங்கு தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை தொடர்ந்து நான்காவது நாளாக புதிய உச்சத்தை எட்டி வருகிறது.
நேற்று அங்கு 50,196 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது.இது அங்கு பதிவான ஆக அதிக எண்ணிக்கையாகும்.
இதையடுத்து மொத்தம் 4.89 மில்லியன் பேர் தொற்றுக்கு ஆளாகினர், 97,198 பேர் மாண்டுவிட்டனர்.
ஏழு நாள் விகிதத்தின்படி ஒவ்வொரு ஒரு லட்சம் பேருக்கும் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை 232ல் இருந்து 249ஆக அதிகரித்துள்ளதாக ராபர்ட் கோச் பொது சுகாதார ஆணையம் கூறியுள்ளது.
நாட்டில் கிருமிப் பரவல் வேகமெடுத்துள்ளதால், மேலும் 100,000 பேர் உயிரிழக்கக்கூடும் என்றும் கிருமி பரவுவதைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கிருமி ஆய்வாளர் கிறிஸ்டியன் டுரோஸ்டன் அழைப்பு விடுத்துள்ளார். இதுவொர் அவசர நிலை என்றும் அவர் சொன்னார்.
இருப்பினும், நாடு தழுவிய அவசர நிலையை நீட்டிக்கப்போவதில்லை என்று கூட்டணி ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வரும் ஜெர்மானிய கட்சிகள் முடிவு செய்துள்ளன.
மாறாக, கட்டாய முகக்கவசம், சமூக இடைவெளிகளைக் கடைப்பிடிப்பது போன்ற நடவடிக்கைகளை அடுத்த மார்ச் வரை தொடர்ந்து கடைப்பிடிக்கும் வகையில் தற்போதுள்ள சட்டத்தை திருத்துவதற்கான நடவடிக்கைகளில் அவை ஈடுபட்டுள்ளன.
ஒருசில பகுதிகளில் தடுப்பூசி போட்டுக்கொள்ள அதிகாரிகள் மக்களை வலியுறுத்தி வருகின்றனர். பெர்லினில் திங்கட்கிழமை முதல் உணவகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், முடித்திருத்தும் நிலையங்கள் உள்ளிட்ட இடங்
களுக்குச் செல்ல தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழைக் காட்டுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் நான்காம் அலை மிக மோசமாக இருக்கும் என சில மருத்துவர்களும் எச்சரித்துள்ளனர்.